"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்" - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2019

"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்"

(எம்.ஆர்.எம்.வஸீம்)
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. 

அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை. 

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment