ராஜித சேனாரத்னவிடம் வாக்குமூலம் - தேவையற்ற அழுத்தம் கொடுத்து சர்வதேச சமூகத்தை குழப்ப எமக்கு தேவையில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

ராஜித சேனாரத்னவிடம் வாக்குமூலம் - தேவையற்ற அழுத்தம் கொடுத்து சர்வதேச சமூகத்தை குழப்ப எமக்கு தேவையில்லை

சுவிஸ் தூதரக ஊழியரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச் சார்பற்ற நேர்மையான விசாரணையை முன்னெடுப்பதற்கும் இப்பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் கையாள்வதற்கும் சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

சாட்சி வழங்காமல் சுவிஸ் பணியாளர் தலைமறைவாகியிருப்பதே இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறிய அவர், அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் தொடரான நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எக்காரணம் கொண்டும் அரசாங்கம் தேவையற்ற அழுத்தங்களை தூதரக சேவைகளுக்கு பிரயோகிக்காது. சுவிற்சர்லாந்து பணியாளர் வெளியில் வந்து வாய் திறந்தால் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு சுவிற்சர்லாந்து பணியாளர் விவகாரம் பற்றி வினவப்பட்டது. 

இதற்குப் அமைச்சர் பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமும் சில தகவல்கள் உள்ளன. 

எனவே அவரிடமும் வாக்குமூலம் பெறுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு சுவிற்சர்லாந்து தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த முறைப்பாடோ சாட்சியமோ கிடையாது.

எனவே பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் வெளியில் வந்து சாட்சியமளிக்க வேண்டும். சர்வதேச சமூகமும் இதனுடன் தொடர்புள்ள தூதரகமும் நம்பகத்தன்மையுடனான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

குற்றஞ்சாட்டிய பெண் ஊழியர் தலைமறைவாகியிருப்பது பாரிய பிரச்சினையாக இருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் எம்மிடமில்லை. அவரை யாரும் கண்டதும் கிடையாது. அவர் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாடு செல்ல அவருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவரின் கருத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு இது தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அவரிடமும் வாக்குமூலம்பெற வேண்டும் என அரசிடம் கோரப்பட்டுள்ளது. தேவையற்ற அழுத்தம் கொடுத்து சர்வதேச சமூகத்தை குழப்ப எமக்கு தேவையில்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment