தேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

தேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா

(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி தலைமை பதவியை அவருக்கு வழங்குவதாக தெரிவிப்பது முட்டாள்த்தனமான வாதமாகும். அதில் எந்த பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பண்டாரகமயில் இன்று நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக, எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதம வேட்பாளராக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாசவை முற்படுத்துவதற்கு அனைவரதும் இணக்கம் இருக்கின்றது.

நாட்டின் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு முதிர்ச்சி பெற்றுள்ள சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கும் அளவுக்கு தகுதி இருக்குமானால், கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு யாருக்கும் பிரச்சினையாக இருக்காது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தேவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அந்த தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே ஆகும் என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும். ரணில் விக்ரசிங்க நீண்ட காலம் இந்த நாட்டில் பிரதமராக இருந்துள்ளார். 

கட்சியின் தலைவராக மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். அதனால் தற்போது அவர் அரசியலில் புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் கட்சியின் தலைமை பதவியை அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக தெரிவிப்பது, முட்டாள்த்தனமான வாதமாகும். அதில் எந்த பயனும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment