சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள O/L மாணவர்களுக்கு அருகிலுள்ள நிலையத்தில் வசதி - பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2019

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள O/L மாணவர்களுக்கு அருகிலுள்ள நிலையத்தில் வசதி - பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை, சாதாரண தர பரீட்சைக்கு ஒரு சில விசேட பரீட்சை நிலையங்களை அமைக்க பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு இம் முறை 20 சிறைக் கைதிகள் தோற்றவுள்ளதோடு, சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள விசேட பரீட்சை நிலையங்களில், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் சிறைக்கைதிகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஏழு இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாளை (02) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகள் காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதால், பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்பு பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாகயம் சனத் பூஜித, தெரிவித்தார்.

பரீட்சைகள் தொடர்பாக பெறப்படும் அனைத்து முறைப்பாடுகளையும் விசாரிக்க விசேட விசாரணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மேலதிக பரீட்சை மேற்பார்வைக் குழுக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சைகள் தொடர்பான ஏதேனும் மோசடிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், 1911 அல்லது 011 2784208 அல்லது 011 2784537 எனும் உடனடி தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பரீட்சைகள் தொடர்பான வினாத்தாள் திருத்தும் பணிகள், எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி முதல் ஜனவரி 26ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment