மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 6,696 குடும்பங்களைச் சேர்ந்த 22,614 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 6, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 6,696 குடும்பங்களைச் சேர்ந்த 22,614 பேர் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 6,696 குடும்பங்களைச் சேர்ந்த 22,614 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்றுமுதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இன்று அனர்த்த நிலைமைகளை ஆராயும் அவசர கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

இக்கலந்துரையாடல் மூலமாக மாவட்டத்தில் எவ்வெவ் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, இதற்கு ஏதுவான சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் இராணுவம், கடற்படை, பொலிஸ் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் உசார் நிலையில் வைக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.

நேற்று முதல் 2 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைத்த அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக 8 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள், சமைத்த உணவுகள், குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.

கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக் கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது .

இதேபோன்று சித்தாண்டி, ஈரலக்குளம் வீதிக்கும் இயந்திரப்படகுகள் மூலமே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலே 2 இடைத்தங்கல் முகாம்களும், மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிலே 1 இடைத்தங்கல் முகாமும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலே 1 இடைத்தங்கல் முகாமும், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிலே 4 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

(மணல்சேனை நிருபர்)

No comments:

Post a Comment