அரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு 24 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஐ.ரி.என். தொலைக்காட்சியில் எந்தவொரு நேரடி அரசியல் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்வதை தடை செய்து தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அந்த நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்தே நேற்றுக்காலை தடை உத்தரவை அவர் விலக்கிக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் ஐ.ரி.என். நிறுவன உயர்மட்டத்துக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே அந்த நிறுவனத்தின் மீதான தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் ஐ.ரி.என். இல் இடம்பெற்ற நேரடி அரசியல் நிகழ்ச்சியொன்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதகமாகவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பிய கடிதத்தில் தடைக்கான காரணமாக கூறப்பட்டிருந்தது.
மூன்று தேர்தல் ஆணையாளர்களில் ஒருவரும், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள இரண்டு அரசியல் கட்சிகளும் பல்வேறு தனியார் ஊடக அமைப்புகளும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்படி கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்படி செயற்பாட்டுக்கு மற்றொரு தேர்தல் ஆணையாளரான ரட்னஜீவன் ஹுலும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடனான எந்தவொரு கூட்டத்திலும் ஐ.ரி.என்னுக்கு எதிரான மேற்படி தடை பற்றி பேசப்படவில்லை என்று ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார்.
அரசியலமைப்பின்படி தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானங்கள், ஆணைக்குழுவில் இடம்பெறும் மூன்று ஆணையாளர்களில் இருவரின் பெரும்பான்மை ஆதரவை பெறவேண்டும். அத்துடன் மூன்று ஆணையாளர்களும் பங்குபற்றும் ஒரு கூட்டத்திலேயே இந்த பெரும்பான்மை ஆதரவு பெறப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் ஐ.ரி.என். மீது தடை விதிக்கும் தீர்மானம் பற்றி எந்தவொரு தேர்தல் ஆணையாளர்களின் கூட்டத்திலும் பேசப்படவில்லை. மேற்படி கடிதம் தேர்தல் ஆணைக்குழுவின் சார்பாக அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்பட்டபோதிலும், அவ்வாறான தீர்மானம் எதுவும் கலந்துரையாடி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று ரட்னஜீவன் ஹுல் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு கூட்டமும் இடம்பெறவில்லை. இந்த தப்பான நோக்கத்தைக்கொண்ட செயற்பாடு சமமான செய்தி வெளியிடுதல் தன்மையை பாதிக்கும். மக்கள் தனியார் ஊடகங்களின் தயவை நாட வேண்டிய நிலையை இது உருவாக்கும்.
ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கும் மக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துவதுடன், சுயாதீனமாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலில் பக்கச் சார்பாக நடப்பதாகவும் காட்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த விடயத்தில் பேராசிரியர் ஹுல் மட்டுமன்றி சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்துகொள்கிறது என்று காட்டுவதாக உள்ளது.
ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இது பற்றி கருத்துத் தெரிவித்த போது, தனியார் ஊடகங்களின் செயற்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அவற்றுக்கு எதிராக செயற்படும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. எனினும் ஐ.ரி.என். மீது மட்டும் தேர்தல் ஆணையாளர் இலக்கு வைக்கிறார்.
அரசாங்க ஊடகங்கள் மீது கட்டுப்பாடு விதிப்பது நல்ல விடயம்தான் என்று தெரிவிக்கும் பிமல் ரத்னாயக்க, கடந்த வாரம் தேர்தல் ஆணையாளருடன் நடத்திய கூட்டத்தில் தனியார் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட தேர்தல் ஆணையாளர் மறுப்புத் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
முன்னர் ஒரு தடவையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து அவர்களை எச்சரிக்குமாறு கேட்கப்பட்ட போது ‘நடுவர்கள் போட்டியைக் கைவிட்டுவிட்டனர்’ என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டதாக பிமல் ரத்னாயக்க கூறியுள்ளார்.
சட்ட வல்லுனர் ஒருவர் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்தபோது, மேற்படி கடிதம் அரசியலமைப்பின் 12ஆம் மற்றும் 14ஆம் சட்டக் கூறுகளுக்கு மாறாக இருப்பதாகக் கூறுகிறார்.
சாதாரண தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையாளர் சட்டத்துக்கு மேற்பட்டவராக இருக்கலாம். ஆனால் அரசியலமைப்பு அவ்வாறானதல்ல. தண்டனையானது குற்றத்துக்கு ஏற்றதாக வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
ராஜபக்ஷக்களுக்கு சார்பில்லாத வகையில் செயற்படும் ஊடக அமைப்புகளுக்கு பல தடவைகளில் தேர்தல் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் ராஜபக்ஷ தரப்பு ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருந்துள்ளது.
உதாரணத்துக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று சிரேஷ்ட முஸ்லிம் எம்.பி.யான ஏ.எச்.எம். பௌசியின் ஒளிநாடா ஒன்றை மாற்றியமைத்து அதனை தொடர்ந்தும் ஒளிபரப்பி அவர் ராஜபக்ஷ ஒருவரை கொலை செய்ய முயன்றதாக தொடர்ந்தும் அவர் மீது குற்றம் சாட்டி வந்தது. அந்தக் குற்றச்சாட்டு போலி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் அது பற்றி மன்னிப்பு கேட்குமாறு கூறப்படவில்லை. அத்துடன் இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை கண்டிக்கவும் இல்லை.
இந்நிலையில் ராஜபக்ஷ தரப்புக்கு பாதிப்பான ஒரு செய்தியை ஒளிபரப்பியதாக அரசாங்க தொலைக்காட்சியொன்றின் மீது மட்டும் தடை விதிக்கும் அளவுக்கு தேர்தல் ஆணைக்குழு போயுள்ளது என சட்டத்தரணிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகள், ஊடக அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் இது ஒருதலைப்பட்சமான முடிவென சாடியுள்ளன.
இந்த நிலையில் தனியார் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 104 ஆ (5) உறுப்புரையின் கீழான 34 ஊடக வழிகாட்டு நெறிகளை அதிகாரபூர்வமாக்குவதிலும் தேரதல்கள் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment