ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் அவசர அவசரமாக அமெரிக்காவுடன் மில்லேனியம் செலேஞ் கோப்ரேஷன் (Millennium Challenge Corporation) உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் எடுக்கும் இரகசிய நகர்வுகள் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
எமது நாட்டின் காணி மற்றும் நிலப்பரப்பு தொடர்பிலான தரவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது மிகவும் ஆபத்தானதும் அச்சுறுத்தலானதுமாகுமெனவும் அக்கட்சி எச்சரிக்கை விடுத்தது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தற்போதைய அரசாங்கத்தால் கைச்சாத்திடவுள்ள மில்லேனியம் செலேஞ் கோப்ரேஷன் உடன்படிக்கைத் தொடர்பில் சமூகத்தில் பரந்தப்பட்ட கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளன.
மில்லேனியம் செலேஞ் கோப்ரேஷன் என்பது அமெரிக்காவை மையப்படுத்திய ஒரு நிறுவனமாகும். குறித்த நிறுவனம் உலகில் பல்வேறு நாடுகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.
அந்நிறுவனம் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. அதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் போக்குவரத்து கட்டமைப்பை விருத்தி செய்யவும், 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணி வேலைத்திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நன்கொடையில் நாட்டுக்கு பாரிய நன்மைகள் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. மிகவும் பாதகமானதென எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தலொன்று நெருங்கியுள்ள சூழலில் உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் அவசர அவசரமாக செய்யும் செயற்பாடுகள் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வுடன்படிக்கை தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடாது செய்ய முற்படுவது பிரச்சினைக்குரியதாகும். அரசாங்கம் கூறுவது போன்று உடன்படிக்கையில் நன்மைகள் அதிகமாக உள்ளதென்றால் எதற்கு இரகசியமாக இதனை கைச்சாத்திட வேண்டும்.
குறைந்தபட்சம் மக்கள் பிரதிநிதிகள் உள்ள பாராளுமன்றத்திலாவது விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னரும் வெளிநாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் ரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டிருந்தமை மக்களுக்கு புதினமானதல்ல.
ஆனால், இந்த உடன்படிக்கையில் பிரதானமாக காணிகள் மற்றும் காணி தரவுகள் தொடர்பில் குழப்பகரமான சூழலொன்று உள்ளது. அரச, தனியார் மற்றும் வனப் பிரதேச நிலங்கள் தொடர்பிலான தரவுகள் வெளிநாடுகளுக்கு வழங்குவது ஆபாத்தானதாகும் என்பதுடன், நாட்டின் சுயாதீனத்திற்கும் அச்சுறுத்தலாகும். ஆகவே, பரந்துபட்ட கலந்துரையாடலொன்று இதற்கு அவசியமாகும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment