சவூதி அரேபியாவின் அரம்கோ நிறுவனம் ரியாத் பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெறும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஆரம்ப பொது விடுப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.
சவூதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோ இது பற்றிய அறிவிப்பை அரபு மொழியில் ட்விட்டரில் வெளியிட்டபோதும் அது தொடர்பில் மேலதிக எந்த விபரத்தையும் குறிப்பிடவில்லை.
நிறுவனத்தின் 1 அல்லது 2 வீதத்திற்காக பங்குகளை ஏற்படுத்த சவூதி எதிர்பார்ப்பதாக வர்த்தக வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அரம்கோ நிறுவனத்தின் பெறுமதி சுமார் 1.2 டிரில்லியன் டொலர் என்று நம்பப்படுகிறது.
சவூதி அரேபியா மற்றும் தற்போது கெல்ரோன் என்று மாற்றமடைந்த கலிபோர்னியாவின் ஸ்டார்டர்ட் எண்ணெய் நிறுவனத்திற்கு இடையே எண்ணெய் அகழ்வு மற்றும் தேடுவதற்காக கடந்த 1933 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்தானபோதே அரம்கோ நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1973 மற்றும் 1980 க்கு இடையே சவூதி அரேபியா ஒட்டுமொத்த நிறுவனத்தையும் வாங்கியது.
வெனிசுவேலாவுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் இருப்பு நாடாக சவூதி அரேபியா உள்ளது என்ற ஆற்றல் தகவல் நிர்வாகம் குறிப்பிடுகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது எண்ணெய் உற்பத்தி நாடாக சவூதி இருந்தபோதும் மலிவான பிரித்தெடுக்கும் வசதி மற்றும் நாட்டில் உள்ள அனைத்து எண்ணெக்கும் ஏகபோக உரிமை பெற்றிருப்பதால் உலக அரங்கில் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில் எண்ணெயில் சார்ந்திருக்கும் தன்மையை குறைக்கும் நோக்கிலேயே சவூதி தனது எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க முன்வந்திருப்பதாக நம்பப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் திட்டத்தை சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் முன்னெடுத்துள்ளார்.
No comments:
Post a Comment