'அமைச்சர் சஜித் ஒரு யதார்த்த வாதி. அவருடன் சுமார் நான்கு வருடங்கள் பாராளுமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. செய்யக்கூடியதை உறுதியாக சொல்லி அதை நிறைவேற்றிக் காட்டுவார். அதற்கு உதாரணம் அவரது அமைச்சினால் அமைக்கபட்ட வீடமைப்பு திட்டங்களாகும். இவை போல எமது கோரிக்கைகளும் நிச்சயம் பூர்த்தி செய்யப்படும்'
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ஷ - ஒரு குறிப்பு வரைவீர்களா?
இலங்கையில் ஜனநாயக ஆட்சி நிலவுகிறது. இங்குள்ள மக்கள் இராணுவ ஆட்சியை விரும்ப மாட்டார்கள். மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபாய ராஜபக்ஷ இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்து பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர். அவருக்கு யுத்த அனுபவங்களே உள்ளன. அரசியலில் எந்த அனுபவமும் இல்லை. இலங்கையின் எந்தவொரு அரசியல் சபையிலும் பதவி வகிக்கவில்லை. நாட்டின் தலைவர் ஜனநாயக பண்புகளை கொண்டவராக அடிமட்ட ஏழை மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவராக அதற்கேற்ப செயற்படுபவராக இருக்க வேண்டும். அத்தோடு நாட்டில் இதற்கு முன் இருந்த அரசியல் தலைவர்கள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து அனுபவத்துடன் பணியாற்றினார்கள் எனினும் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறான எவ்வித தகுதியுமின்றி ஜனநாயக நாட்டின் தலைமைப் பதவியை அடைய நினைப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என்பது எனது கருத்து.
உங்கள் அரசியல் வாழ்வில் இந்த அளவுக்கு இனவாதம் மதவாதம் கக்கும் ஒரு தேர்தலை இதற்கு முன் சந்தித்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை! எனக்கு 1994இல் இருந்து நேரடி அரசியல் அனுபவம் இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இனவாதமும் மதவாதமும் புரையோடி போன தேர்தலாக இத்தேர்தல் காணப்படுகிறது.இலங்கையில் இன மோதல்கள், இன பூசல்கள் என்பன காலத்திற்கு காலம் தோற்றம் பெற்று மறைந்துள்ளன. ஆனால் இனவாதம் இன்று வேகமாக பரவி வருகிறது. பாடசாலை சிறார்கள் மத்தியிலும் இனவாதம் பரவுவதை எம்மால் காண முடிகிறது. இவ்வாறு இனவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இன முறுகல் ஏற்பட்டு சிறுபான்மை மக்களின் இருப்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அத்தோடு நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்படும். இது எமக்கு ஆரோக்கியமானதல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல.
இ.தொ.கா 32அம்சக் கோரிக்கையை முன்வைத்தமாதிரி தமிழ் முற்போக்கு கூட்டணியும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. சஜித் பிரேமதாச இக்கோரிக்கைகள் தொடர்பாக என்ன கூறியுள்ளார்?
நிச்சயமாக எமது கோரிக்கைகளை ஏற்று, அவற்றை சாதகமாக பரீசீலித்த அவர் மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உச்ச அர்ப்பணிப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். அமைச்சர் சஜித் ஓரு யதார்த்தவாதி. அவருடன் சுமார் நான்கு வருடங்கள் பாராளுமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. செய்யக்கூடியதை உறுதியாக சொல்லி அதை நிறைவேற்றிக் காட்டுவார். அதற்கு உதாரணம் அவரது அமைச்சினால் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களாகும். இவை போல எமது கோரிக்கைகளும் நிச்சயம் பூர்த்தி செய்யப்படும்.
சஜித் பிரேமதாச - சாதக பாதக அம்சங்களை ஆராய்வோமா?
ஆமாம், அவர் ஏழை மக்கள் நலன் பேணும் தலைவனாக போற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் என்பது முதல் சாதகமான விடயம். இனவாதம் பேசாத தலைவர், ஏழை மக்கள் துன்பம் உணர்ந்தவர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு உழைப்பை மூலதனமாக நம்பி பணி புரிபவர். திறமையான நிர்வாகி என அறியபட்ட மனிதநேயன். எளிமையான வாழ்க்கை மூலம் மக்கள் அபிமானம் பெற்றவர். மக்கள் நலன், நாட்டின் அபிவிருத்தி என்பவற்றை நோக்கமாகக் கொண்டு உழைப்பவர் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் இனவாதம் பேச மாட்டார், குறுகிய அரசியல் நோக்கத்துடன் சமூகத்தை திருப்திப்படுத்தி ஏனைய மக்கள் மனங்களை புண்படுத்த மாட்டார். எனவே நாட்டு மக்கள் மனங்களில் அவர் உள்ளார் என்பது உலகறிந்த உண்மை.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான செய்திகளை பலரும் அறிவர். ஆனால் ரணசிங்க பிரேமதாசவின் மகன், வீடமைப்பு அமைச்சர் என்பதற்கு அப்பால் பெரும்பாலான தமிழர்களுக்கு அவரைப் பற்றித் தெரியாது. சொல்வீர்களா?
தலைவர் சஜித் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் கற்று ஆங்கில மொழிப்புலமையுடன் பணியாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். 52வயதான இவர் தினமும் 18மணித்தியாலங்கள் மக்கள் பணி புரிகிறார். தந்தை வழியில் வீடமைப்பு திட்டங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தி பெரும் புரட்சி செய்து வருகின்றார். சிறந்த பண்பாளன். இவர் வறுமை ஓழிப்பிற்கு முக்கியம் அளித்து செயற்படும் தலைவர். இவர் துடிப்புடன் செயற்பட்டு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கக் கூடியவர். இளம் வயதில் தலைமைப் பதவி வகிக்கப் போகும் அவர் நாட்டின் வளர்ச்சிக்காக பல கொள்கைகளை அறிமுகப்படுத்தி வெற்றி காண முடியும். 70வயதில் தலைவர் ஆகினால் இது சாத்தியமாகாது. அவருக்கு நீண்ட அரசியல் பயணம் இருப்பதால் பல திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும். சர்வதேச உதவியும் கிட்டும்.
சஜித் ஜனாதிபதியான பின்னர் 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ்தான் அவரது அதிகாரங்கள் அமையும். அவர் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இச்சூழலில் தான் அளிக்கும் வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்றக்கூடியதாக இருக்குமா?
நிச்சயமாக முடியும். ஏனெனில் அவரது வாக்குறுதிகள் நாட்டு மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டவை. அதை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு தான் பாதகமாக முடியும். சஜித்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் 19ஆவது திருத்தம் பாதகமாக இருந்தால் அதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றவும் முடியும். மக்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு 19வது திருத்தம் தடையாக அமையாது என்பதே எனது கருத்து.
சஜித்தினால் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டால்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அப்படியான கேள்விக்கே இடமில்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் சஜித்தின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவை. மூவின மக்களின் அமோக ஆதரவு அவருக்கு உண்டு. குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். நிச்சயம் வெற்றி பெறுவார். ஒருவேளை ஜனாதிபதியாக கோட்டாபே ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டால் நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும். அவர் இராணுவ உயர் அதிகாரியாக இருந்து பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றினார். யுத்த காலத்தில் நேரடியாக தொடர்புபட்டு இருந்தார். அவருக்கு இராணுவ நிர்வாகமே தெரியும். அதை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
ராஜபக்ஷ குடும்பம் - சஜித் குடும்பம் - ஒப்பீடு செய்வீர்களா?
ஆமாம், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் குடும்ப ஆட்சி இருக்காது. அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகனாக தந்தையின் மறைவுக்கு பின் அரசியலில் நுழைந்து மக்கள் பணி ஆற்றுகிறார். குடும்ப ஆட்சியை இவர் ஊக்குவிக்கவில்லை. ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவார். நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வர். மறுபுறம் கோட்டாபய ஜனாதிபதியானால் நாட்டில் இராணுவ ஆட்சியும் குடும்ப ஆட்சியும் தலைதூக்கும். ஜனாதிபதி இராணுவ நிர்வாக கட்டமைப்புடன் ஆட்சி செய்வார். ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகிப்பவர். குடும்ப அரசியல் மாகாண ரீதியாகவும் விஸ்தரிக்கபடும். அவர்களது உறவினர்களும் அரசாங்கத்தில் உயர் அமைச்சர்களாவர். முக்கிய பொறுப்புகளில் குடும்ப ஆதிக்கம் காணப்படும். அனைத்து விடயங்களிலும் குடும்பத் தலையீடு காணப்படும். இது நாட்டுக்கு நல்லதல்ல.
நேர்கண்டவர்: ஆ.ஜோன்சன்
No comments:
Post a Comment