சூடு பிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் : மைத்திரிக்கு சந்திரிகா விசேட கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2019

சூடு பிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் : மைத்திரிக்கு சந்திரிகா விசேட கடிதம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பையும் விதிமுறைகளையும் மீறி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து கொண்டுள்ள விடயமானது, தான்தோன்றித்தனமான செயற்பாடாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பாகவே இந்த கடிதத்தினை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி அமைத்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு மத்திய குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்பதனை அறிவேன்.

மேலும் நான் வெளிநாட்டில் இருக்கும்போது கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு கூட்டத்துக்கு அழைத்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடுகின்றேன். கட்சியின் யாப்பை மீறி தான்தோன்றித்தனமாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்போது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் என்னை சந்தித்து பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து கொண்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டனர்.

அத்துடன் வேறு வழியை காட்டுமாறும் வலியுறுத்தினர். இதனாலேயே சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காக புதிய பாதையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளோம்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் தலைவரான பின்னர் திட்டமிட்டு கட்சியை அழித்து தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். 

ஆனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிராக அறிவிப்பு ஒன்றைக்கூட விடுக்கவில்லை. எனவே எனது செயற்பாட்டின் ஊடாகவும் கட்சிக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாது” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment