புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் தரப்பினருடனும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ எத்தகைய உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லையென தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுதொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ வேறு அமைப்புகளுடனோ இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ எந்த ஒரு உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை.
நாட்டு மக்களுக்கான ஒரே உடன்படிக்கையாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த விஞ்ஞாபனத்திற்கு இணங்கி நவீன மற்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைக்கின்றோம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான பொது உடன்படிக்கையாகவோ இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அந்த ஆரோக்கியமான வேலைத் திட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல நாம் அழைப்பு விடுக்கின்றோம். எந்தவொரு கட்சியையும் விட எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு காத்திரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான கொள்கைப் பிரகடனமாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment