புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வேன் மட்டுமே வரும் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வேன் மட்டுமே வரும்

2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என கிளிநொச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் வெள்ளை வேன் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வேன் மட்டுமே வரும்.

2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது. 

ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டு வரவேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேறபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது என பிரதமர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியை அபிவிருத்தி செய்வதற்கு நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம் ஆனையிறவு உப்பளம் புனரமைத்தல், பூநகரியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துதல், வடக்கு கிழக்கில் விசேட பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தொழில் வாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, ஹரிசன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

No comments:

Post a Comment