சந்திரிகா உட்பட சுதந்திர கட்சியினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - மத்திய குழுவில் நாளை தீர்க்கமான முடிவு என்கிறார் தயாசிறி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

சந்திரிகா உட்பட சுதந்திர கட்சியினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - மத்திய குழுவில் நாளை தீர்க்கமான முடிவு என்கிறார் தயாசிறி

கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். 5ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளும் பறிபோகும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

என்றாலும், 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான மாநாடு 5ஆம் திகதி (நாளை) நடைபெறும் என்பதுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பீதியை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து எம்மை நீக்க முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவுசெய்திருந்தமையால் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஓர் அணியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஓர் அணியென சுதந்திரக் கட்சி இரு துருவங்களாக பிரிவடைந்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியில் சந்திரிகா இணைந்துகொண்டதுடன், கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்.

நாளை 5ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாநாட்டில் சஜித் பிரேமதாசவுக்கான உத்தியோகப்பூர்வமாக ஆதரவை சந்திரிக்கா குமாரதுங்க அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், சந்திரிகாவின் தரப்பின் செயற்பாடுகளுக்கு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். 

இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதென சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது. அதற்கு மாறாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும்.

நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் சந்திரிகா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகும் வகையில் எமது மத்திய குழுவின் தீர்மானம் அமையக்கூடும். அத்துடன், கலந்துகொள்ளும் அனைத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவியும் பறிபோகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment