பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல நான் அவைகளுக்கு அப்பாற்பட்டவன் - பைஸர் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல நான் அவைகளுக்கு அப்பாற்பட்டவன் - பைஸர் முஸ்தபா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இக்கட்சியைப் பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் கட்சிப் பற்றாளர்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும். எனக்கென்று ஒரு கொள்கை உள்ளது. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்திருந்ததை நாம் அறிவோம். இதனை அனைவரும் வரவேற்க வேண்டும். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, முஸ்லிம்களுக்கு ஏன் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை...? என, ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, நான் இரண்டு முறை அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை, இளைஞர்களுக்கே வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதியின் இக்கூற்றை, உண்மையில் வரவேற்கின்றேன்.

பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல. நான் அவைகளுக்கு அப்பாற்பட்டவன். கட்சியின் தீர்மானங்களுக்கு அப்பால் நானும், எமது கட்சிப் பற்றாளர்களும் இம்மியேனும் நகரமாட்டோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சிறந்த கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.ஏ. ராஜபக்ஷ் ஆகியோர் அரும் பாடுபட்டு வளர்த்தெடுத்தனர். கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தடம் புரளாது இக்கட்சி நிலைத்து நிற்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சுதந்திரக் கட்சியின் நன்மைக்காக, அதன் எதிர் கால நலனுக்காக புதிய ஜனாதிபதியோடு, புதிய பிரதமரோடும், புதிய அரசாங்கத்தோடும் எமது கட்சி பேசும். அது எமது கட்சிக்கு உரித்தானது. அதில் எவ்விதத் தவறுமில்லை.

நாம் சிறந்த கொள்கையுள்ள கட்சிப் பற்றாளர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்பதை, எமது இலங்கை வாழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

(ஐ. ஏ. காதிர் கான்)

No comments:

Post a Comment