யாழ்.மாவட்டத்தில் சுமுகமான முறையில் தேர்தலை நடத்தக்கூடிய விதத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமைகளில் 6,000 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 531வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று (01) தபால் மூல வாக்களிப்புக்கள் நடைபெற்றன. 267 திணைக்களங்களில் 29 ஆயிரத்து 850 பேர் தபால் மூல வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி அந்ததந்த திணைக்களங்களில் தமது வாக்குகளை அளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வழமை போன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால், நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் வாக்குப் பெட்டிகள் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும். எழுவைதீவு மற்றும் அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இருந்து கடற்படையின் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்படும்.
அருகிலுள்ள வாக்குச் சாவடிகளில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள் மிக சீக்கிரமாக எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தூர இடத்து வாக்குப் பெட்டிகள் உரிய நேரத்தில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நிருபர்
No comments:
Post a Comment