சமூக ஜனநாயகத்தை இலக்காகக் கொண்டதாகவே ஜனநாயக தேசிய முன்னணியின் பயணம் அமையும். அனைத்தின மக்களினதும் உரிமைகளை பாதுகாத்து உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம் என்பதுடன், அறிவையும் ஏற்றுமதியையும் மையப்படுத்திய பொருளாதாரத்தின் மூலம் சகலருக்கும் பிரதிபலன்களையும் பெற்றுக்கொடுப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பு தாஜ் சமுதிரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அணியினர் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஜனநாயக தேசிய முன்னணியில் கைக்கோர்த்துள்ளன. நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான சத்தியப்பிரமாணத்தையே நாம் இன்று எடுத்துக்கொள்கின்றோம்.
சுபீட்சமான, வளமான, அபிவிருத்தியடைந்த, சமூக சாதாரணத்துவமிக்க, நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌதீக பாதுகாப்பை உறுதிப்படுத்தும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்து ஏனைய மதங்கள் மற்றும் இனங்களை பாதுகாத்து உண்மையான ஜனநாயகத்தையும் அபிவித்தியையும் நோக்கி நாட்டை கொண்டுசெல்லும் பயணத்தையே ஆரம்பித்துள்ளோம்.
துரிதமான அபிவிருத்தை நோக்கி நாட்டை நகர்த்தி அனைத்து மக்களுக்கும் சம அளவில் வளத்தை பகிர்ந்து நாட்டை வலுப்படுத்தும் விதத்திலே எமது கொள்கைகள் அமையும். இது சமூக ஜனநாயகத்தையும், நாட்டின் அனைத்து இன மக்களினதும் நீதியையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும் பயணமாகும்.
அறிவை மையப்படுத்திய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவோம். தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் புரட்சியின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளோம். விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் அரச மானியத்துடன் வலுப்படுத்தப்படும்.
எமது வேலைத்திட்டத்தில் நாட்டு மக்களுக்குதான் பிரதிபலன் கிடைக்கும். குடும்பங்களை மையப்படுத்தியதல்ல. மக்களை வளப்படுத்தும் கொள்கைகளே எம்மிடமுள்ளது. எமக்கு வழங்கப்பட்டுள்ளது தற்காலிக பொறுப்பாகும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment