பேருவளை பகுதி வாழ் மக்களின் நான்கு முக்கிய தொழில்களான இரத்தினக்கல், உல்லாசப் பயணத்துறை, கடற்றொழில், விவசாய துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து இத்துறையில் ஈடுபடுவோரின் வருமானத்தை அதிகரிக்க நான் ஜனாதிபதியானதும் நடவடிக்கை எடுப்பேன் என புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.
பேருவளை கடற்கரை மைதானத்தில் நேற்று முன்தினம் (31) மாலை நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, பேருவளை ஐ.தே.க. பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பேருவளை முன்னாள் அமைப்பாளர் எம்.எம். அம்ஜாத், பேருவளை பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரன்சித் திலகசிறி உட்பட கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட நகர சபை, பிரதேச சபை வேட்பாளர்கள் 15 பேர் இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க மேடையேறியமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நான் மீண்டும் பேருவளைக்கு வருவேன். நான் வெறுங்கையுடன் வரமாட்டேன். பாரிய அபிவிருத்திக்கான செயற்திட்டங்களை உள்ளடக்கிய பையுடனே வருவேன் என உறுதியளிக்கிறேன்.
இரத்தினக்கல் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். இத்தொழிலுக்கு அறவிடப்படும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டமை குறித்தும் எனது கவனத்திற்கு இரத்தினக்கல் வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர். தேசிய, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இவ் வியாபாரத்தை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பேன்.
பேருவளை மீன்பிடித் துறைமுகத்தை அதி நவீன வசதிகளுடன் மேலும் அபிவிருத்தி செய்வதுடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன்.
உல்லாசப் பயணத்துறையுடன் தொடர்புள்ள பேருவளைப் பகுதியை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் இத்துறையில் நிலவும் குறைபாடுகள், பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
விவசாயத்துறையை முடியுமானளவு கட்டியெழுப்ப வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை ஒருபோதும் தட்டிவிடமுடியாது. எமது உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும்.
நாட்டில் தலைவிரித்தாடும் வறுமையை பூண்டோடு ஒழித்துக்கட்டி வறுமையின் விளிம்பில் வாழும் மக்களும் சொந்தக் காலில் தைரியமாக வாழ வேண்டும். சமுர்த்தி உதவியை மேலும் அதிகரித்து வறுமையை ஒழிக்க வேண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடையுடன் பாதணியையும் வழங்கி காலை உணவையும் பெற்றுக்கொடுப்பேன். எனது தந்தை ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தை மாற்றுக் கட்சி அரசாங்கம் இடைநிறுத்தியது.
பேருவளை விசேட நிருபர்
No comments:
Post a Comment