நேற்று (31) மற்றும் இன்று (01) ஆகிய இரு தினங்களில், அரச ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தங்களது தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த இரு தினங்களிலும் தேர்தல் தொடர்பான இரு குற்றங்கள் பொலிஸாருக்கு பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கெபிதிகொல்லாவ கல்வி வலய காரியாலயத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பிற்காக, ஹொரவப்பொத்தானையிலிருந்து வாக்களிக்க ஆசிரியர்கள் சிலர் சட்டவிரோதமாக தனியார் பஸ் ஒன்றில் குழுவாக வந்துள்ளனர். இதன்போது குறித்த பஸ்ஸை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய, அவர்கள் வாக்களிப்பதற்காக வந்த முறை தடை செய்யப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை எடுத்ததாகவும், குறித்த பாதையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களை தவிர அல்லது நடக்க முடியாத ஒருவருக்கு போக்குவரத்து செய்து கொடுத்தலைத் தவிர, வாக்களிப்பதற்காக இவ்வாறான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த பஸ் தற்போது பொலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றில் அதனை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாரதியின் வாக்குமூலத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது தவிர, கம்பளை, மாகாண கல்விப் பணிமனையில் இடம்பெற்ற தபால் வாக்களிப்பின்போது, தனது வாக்கை அடையாளமிட்டதன் பின்னர் புகைப்படம் எடுக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை, குருந்துவத்தையைச் சேர்ந்த பாடசாலையின் காவலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர், கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த இரு விடயங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்கு அமைய தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment