மர்ஹும் அஷ்ரபிற்கு அதிகமாக துரோகமிழைத்தவர் என்ற பெருமை ஹக்கீமையே சாரும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

மர்ஹும் அஷ்ரபிற்கு அதிகமாக துரோகமிழைத்தவர் என்ற பெருமை ஹக்கீமையே சாரும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப்

மர்ஹும் அஷ்ரபினது முஸ்லீம்கள் தொடர்பிலான கொள்கைகளில், முஸ்லீம்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், எமது சமூகத்துக்கென எதிர்பார்க்கும் தீர்வுகள், ஏனைய தீர்வுகளால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து, நாம் எமது சமூகத்தினை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என பல விடயங்கள் அதில் உள்ளடங்கப்பட்டிருந்தன என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ஜனாதிபதி வேற்பாளர் ஹிஸ்புல்லாஹ்வை மாத்திரமல்ல, எவரையும் துரோகி என விரல் நீட்டி குற்றம்சாட்ட, அறுகதையற்ற ஹக்கீமின் ஏனைய விரல்கள், ஹக்கீமையே துரோகி என சுட்டிக் காட்டுகின்றது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பலரது முயற்சியாலும், மக்களது துஆக்களினாலும், அந்த மக்கள் நோற்ற நோன்புகளைக் கொண்டும், செய்த பல தியாகங்களின் அடிப்படையிலும் உருவான கட்சியாகும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் உருவாக்கிய கட்சியல்ல, மர்ஹும் அஷ்ரபினால் கட்டமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கட்சியின் சிம்மாசனத்தில் இடையில் வந்து அமர்ந்து கொண்டவர் தான் இந்த ஹக்கீம். இவரால் அஷ்ரபின் கொள்கைகளுக்கு ஏற்பட்ட அல்லது செய்யப்பட்ட துரோகங்கள் ஒன்றல்ல இரண்டல்ல, பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். 

அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட யாப்பிற்கு மாற்றமாக, இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட உயர்பீடத்தில் 58 உறுப்பினர்களை ஹக்கீமின் விருப்பத்துக்கு ஏற்ப நியமிக்கவும் அல்லது நீக்கி மாற்றியமைக்கும் வகையில் ஹக்கீமினால் யாப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு மர்ஹும் அஷ்ரபின் விருப்பத்துக்குரியவர்களும், சொத்துக்களை விற்று தங்களது நிதியினால் இக்கட்சியினை உருவாக்கியவர்களும், ஆரம்பத்தில் இருந்து இக்கட்சியினை தொடங்கும் போது உடனிருந்து உழைத்தவர்களும் இல்லாமல் செய்யப்பட்டு, மர்ஹும் அஷ்ரபின் பரம விரோதிகளும் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தவர்களும், மர்ஹும் அஷ்ரபை விமர்சித்தவர்களும் உயர்பீடத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். 

சம அந்தஸ்த்தினைக் கொண்டு காணப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் எனும் இரு பதவிகளில், செயலாளர் நாயகம் எனும் பதவியின் அதிகாரங்கள் முற்றாக குறைக்கப்பட்டு, இல்லாமல் செய்துள்ளதோடு, ஒரு பெயரளவிலான செயலாளரினை தலைவர் தெரிவு செய்வார் என யாப்பில் ஹக்கீமினால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர் தெரிவிக்கையில், கிழக்குக்கு வெளியில் தலைவர் அல்லது செயலாளர் காணப்படின், கிழக்கிற்குள் தலைவர் அல்லது செயலாளர் எனும் கோட்பாட்டிற்கு அமைவாக மர்ஹும் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இவ்விரு பதவிகளும் எமது சமூகத்தினை காக்கும் இரண்டு கண்கள் போன்ற தூண்களாகவே பார்க்கப்பட்டது, ஒரு பதவி இயங்கா விட்டாலும், அடுத்த பதவி இயங்கும் என்ற தூர நோக்கு சிந்தனையால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸில் இந்த இரண்டில் ஒன்று தான் உள்ளது. அந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருவரிடத்தில் மாத்திரம் குவிந்து, சோரம்போய், சரணடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. 

இன்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸில் நடக்கும் குளறுபடிகளை தட்டிக் கேட்க எவருமில்லை. இக்கட்சியினை நம்பிய எமது மக்களின் நிலை அதோகதியாகி கேள்விக் குறியாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கென இருந்த யாப்பும் இன்றில்லை. முழுவதும் தனி மனித சர்வாதிகார தலைமைத்துவ முறைமைக்கு ஏற்ப ஹக்கீமால் மாற்றம் செய்யப்பட்டு ஏப்பமிடப்பட்டுள்ளது. இங்கு ஹக்கீம் மர்ஹும் அஷ்ரபுக்கு செய்தது துரோகமில்லையா? 

கடந்து வந்த இந்த 19 வருட காலப்பகுதியில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மத்தியஸ்தம் வகித்தவர்களிடமோ? அல்லது பாராளுமன்றத்திலோ? அல்லது அமைச்சரவையிலோ? அல்லது ஏனைய கட்சிகளிடமோ அல்லது அரசிடமோ? முஸ்லிம்களுக்கான “முஸ்லீம் தேசியம்” தொடர்பில் கரையோர மாவட்டத்தையோ? அல்லது நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகினையோ? கேட்டு ஹக்கீம் இன்று வரை எவருடனாவது பேசி இருக்கின்றாரா? 

கரையோர மாவட்டம் அல்லது நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு என போராடி வந்த மர்ஹும் அஷ்ரபின் மறைவோடு அவரது கொள்கையுடனான கோரிக்கை ஹக்கீமினால் மறைக்கப்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் யாப்பு மற்றும் கொள்கையில் இருந்தும் இக்கோரிக்கையானது மறைந்து விட்டது. 

முஸ்லீம்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் மாகாணசபை, மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஹக்கீம் கை உயர்த்தியது மர்ஹும் அஷ்ரபுக்கும் அவரது மக்களுக்கும் செய்த பாரிய துரோகமில்லையா? 

எங்களது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சியினை ஹக்கீம் வைத்துக் கொண்டு, ஓட்டமாவடி லெப்பை ஹாஜியாருக்கு தேசியப்பட்டியல் தருவதாக கூறி ஏமாற்றியது, இறக்காமத்தில் காபட் ரோட் மற்றும் மாயக்கல்லி மலையில் இருந்து இரண்டு கிழமைக்குள் சிலையினை அகற்றுவதாக கூறி ஏமாற்றியது, ஒலுவிலில் தொழில் பேட்டை மற்றும் தாருஸ்ஸலாம் அமைப்பதாகச் சொல்லி அம்மக்களை ஏமாற்றியது, சாய்ந்தமருத்துக்கு பிரதேச சபை தருவதாக கூறி வாக்குகளை பெற அம்மக்களை ஏமாற்றியது, என அடுக்கிக் கொண்டே போகலாம். 

இவ்வளவு வேலைகளையும் ரணிலுக்காகவே ஹக்கீம் செய்தாரே தவிர, மர்ஹும் அஷ்ரபினை நினைத்து அல்ல. இது மர்ஹும் அஷ்ரபுக்கு செய்த துரோகமில்லையா? 

ரணில் சாரதியாக இருக்கும் வரை UNP எனும் வாகனத்தில் நான் ஏற மாட்டேன் என மர்ஹும் அஷ்ரப் சொல்லியும், அதில் ஏறிய ஹக்கீம் மர்ஹும் அஷ்ரபுக்கு செய்தது படுபயங்கரமான துரோகமாகும். 

இவ்வாறு எல்லாத் துரோகங்களையும் ஹக்கீமே மர்ஹும் அஷ்ரபுக்கு செய்து விட்டு, கட்சிக்காக உழைத்தவர்கள் மீது அல்லது ஏனையவர்கள் மீது பழியை சுமத்துகிறார். இன்று அவரது வசதி வாய்ப்புகளுக்காக, தனிப்பட்ட முடிவிற்கு அமைய, எந்தவொரு ஒப்பந்தமுமின்றி அன்னத்துக்கு வாக்குப் போடுங்கள் என, எமது மக்களை மீண்டும் ஏமாற்ற முனைவதும் ஹக்கீம் மர்ஹும் அஷ்ரபுக்கு செய்யும் துரோகமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. 

எனவே ஹக்கீமினது இத்துரோகங்களை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், எமது கட்சி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு SLPP யுடன் எமது மக்களுக்கு அவசியமான, உரிமை சார்ந்த 13 விடயங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் மொட்டு சின்னத்துக்கு ஆதரவளித்து, வாக்களிக்க தீர்மானித்துள்ளது. எனவே எமது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மொட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதே காலத்தின் தேவையாகவும் உள்ளது என, மக்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment