வடக்கில் ஒருபோதும் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது - பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

வடக்கில் ஒருபோதும் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது - பாதுகாப்புச் செயலாளர்

வடக்கில் ஒருபோதும் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் தாயகப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளினால், எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்று இன்று (30) முற்பகல் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் என்ற ரீதியில் யாரையும் அச்சுறுத்த வேண்டியத் தேவை எமக்குக் கிடையாது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாவீரர்களை நினைவுக்கூற அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், இதற்கு உடனடியாக தடைவிதிப்பது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும். அது முறையும் அல்ல. எனவே, நாம் எதிர்க்காலத்தில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளின்போது எந்தவொரு சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அந்த மக்கள் இறந்தவர்களைத்தான் நினைவு கூர்ந்தார்கள். இது ஜனநாயக நாடாகும். அந்த வகையில், பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படுமானால், நாம் பொலிஸாரின் ஊடாகத்தான் நடவடிக்கை எடுப்போம்.

பொலிஸால் ஒரு நிலைமையை கட்டுப்படுத்த முடியாது போனால், விசேட பொலிஸ் அதிரடிப் படையினரை களமிறக்குவோம். இந்த இரண்டு தரப்பினராலும் ஒரு நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாதுபோனால் மட்டும்தான் நாம் இராணுவத்தை பயன்படுத்துவோம்.

இந்த நாட்டின் சட்டக்கட்டமைப்புக்கு இணங்கவே அனைத்தும் முன்னெடுக்கப்படும். நாம் வடக்கு மக்களுக்காக இன்னும் நிறைய சேவைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமாகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் வடக்கு - கிழக்கு மக்களுக்காக நிறைய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

இதனை எதிர்க்காலத்திலும் மேற்கொள்ள கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அப்போதுமட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயரும்.

அதேநேரம், நாம் எந்தக் காரணம் கொண்டும் இராணுவ முகாம்களை இல்லாது செய்ய மாட்டோம். அரசாங்கத்துக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும்.

இராணுவ முகாம்கள் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமமும் ஏற்படப்போவதில்லை. எனவே, யாருடைய தேவைக்காகவும் நாம் இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அகற்ற மாட்டோம்.

எமக்கு இனவாதமோ மதவாதமோ கிடையாது. அனைத்து மக்களையும் பாரபட்சம் பாராது பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment