தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க தமிழரசுக் கட்சி கோட்டாவிற்கே ஆதரவளித்திருக்க வேண்டும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியாகும் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க தமிழரசுக் கட்சி கோட்டாவிற்கே ஆதரவளித்திருக்க வேண்டும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியாகும்

இலங்கை தமிழரசுக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியமை, ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க ஆதரவளிப்பதாயின், அவர்கள் உண்மையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவினை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஐபக்ஷவிற்கு ஆதரவு கோரி, இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ஷ யாழ். நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்று வடக்கில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

அன்று நாம் செய்த அனைத்து அபிவிருத்திகளையும் இவர்கள் நிறுத்தியுள்ளார்கள். குறைந்தது, யாழ். பேருந்து நிலையத்தைக்கூட அபிவிருத்தி செய்யவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை.

அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.

அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரிய விடயமல்ல. 2015ஆம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பு, அரசாங்கத்துடன்தான் இணைந்து செயற்படுகிறது.

தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க ஆதரவளிப்பதாயின், அவர்கள் உண்மையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவினை வழங்கியிருக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment