சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் பதவியை இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2019

சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் பதவியை இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும்

சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின் போது விடுதலைப் புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனிவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.

அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கிரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்பட முற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன், மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006, 2007 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர்.

சிங்கள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன்.

தமிழர் விடுதலை கூட்டணி அழிந்து விட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.

2006, 2007 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது. நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. 

தமிழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறித்தான் மக்கள் தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எமக்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment