மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சியை எவ்வாறு கொண்டு செல்வது என்று ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு தெரியாது. ஒரு கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்களில் ஆட்சியைப்பிடிக்க வைத்த பெசில் ராஜபக்ஷவிடமும் மஹிந்த ராஜபக்ஷவிடமும் ஐக்கிய தேசிய கட்சியினர் கால் மடித்து பாடம் படிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சியான உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த தோல்வியுற்றிருந்த போது தோல்விக்கான காரணங்களை ஆராயும் கூட்டம் அடிக்கடி அபேராம பன்சலையில் நடந்தது. அதில் உலமா கட்சியும் கலந்து கொண்டது.
கடந்த 2015 பொதுத்தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கிணங்க மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன சொல்லியிருந்தார்.
ஆனால் திடீரென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாறியதுடன் கட்சியின் செயலாளராக இருந்த சுசில் பிரேமசந்திரவையும் நீக்கினார். இந்த அதிரடிகளால் உறுப்பினர் எண்ணிக்கை முன்னணிக்கு குறைந்தது. பின்னர் அதன் உறுப்பினர்கள் கொஞ்சப்பேரை இணைத்து ஐக்கிய தேசிய கட்சிக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாக ஆட்சி பாரம் கொடுக்கப்பட்டு மஹிந்த பழி வாங்கப்பட்டார்.
இந்த நிலையில் ஒருவரின் நிலை எப்படி இருக்கும்? அந்த நிலையிலும் நான் மஹிந்தவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஆறுதல் தெரிவித்தேன். உங்களுக்கென தனியான கட்சி இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என கூறினேன். ஆனாலும் சுதந்திரக் கட்சியை நாம் பெற வேண்டும் என்றே ஆசைப்பட்டார். தனிக்கட்சியை மறுத்தார். பின்னர் அபேராம பன்சலையில் நடந்த கூட்டத்தில் பெசிலிடம் இது பற்றி விளக்கினேன். நல்லது பார்ப்போம் என்றார்.
பின்னர் பொதுஜன பெரமுன உருவாகியது. வெற்றி பெற்றது. சுதந்திரக் கட்சியும் மஹிந்தவுடன் இணையும் நிலை வந்தது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து தவறுகளை செய்தது.
அன்னம் சின்னத்தில் போட்டியிடாமல் யானை சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். யார் வேட்பாளர் என்ற பிரச்சினையை பெரிதாக்காமல் தலைவர் ரணில் போட்டியிட விரும்பியிருந்தால் சஜித் விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். நிச்சயம் ரணில் தோற்றதும் இப்போது தலைமை பதவியை சஜித் பெற்றிருப்பார்.
இப்போதும் கூட சும்மா சண்டை பிடிக்கும் குழந்தையாகவே சஜித் சித்தரிக்கப்படுகிறார். இவ்வாறு சண்டை பிடித்து தலைவராகி பிரதமர் என்பது முயல் கொம்புதான். ஒரு கட்சியை சரியாக இயக்கத் தெரியாதவர்களால் எப்படி தேர்தலில் வெல்ல முடியும்?
பொதுஜன பெரமுன கட்சி உள்வீட்டு பிரச்சினைகள் இன்றி மிகவும் கட்டுக்கோப்பாக முன்னேறிச் செல்கிறது. இன்னும் 20 வருடங்களுக்கு அக்கட்சி ஆட்சியில் இருக்கலாம் என ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக் கட்சியான உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment