வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்று (29) நண்பகல் ஐதராபாத் மாளிகையில் இடம்பெற்ற இரு நாட்டு அரச தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே இந்திய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தமது அழைப்பினை ஏற்று இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு அரச முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகைத் தந்தமையை அண்டைய நாடு என்ற வகையில் தமது நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற கௌரவமாக கருதுவதாக மோடி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பாகவும் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அரச தலைவர்கள் இதன்போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் இரு நாடுகளினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து செயற்படுதல் தொடர்பிலும் அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக அபிவிருத்தியின் தேவை குறித்தும் விசேட கவனம் செலுத்தினர்.
நீண்டகால பிரச்சினையாக காணப்படும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென நம்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் கவனம் செலுத்தினார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐதராபாத் மாளிகையிலுள்ள விசேட அதிதிகளின் குறிப்பேட்டிலும் நினைவுக் குறிப்பொன்றினை பதிவு செய்தார்.
No comments:
Post a Comment