சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரிவுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இறுதியில் இதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment