நாட்டின் கிராமிய மக்களை ஏழ்மையிலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டுமெனவும் தனது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது தேர்தலொன்று வந்துள்ளது. இம்முறை அது தேர்தல் போல் தெரியவில்லை. நத்தார் காலம் போலுள்ளது. ஒருவர் நெற்பயிர் செய்கைக்கு இலவசமாக உரம் வழங்குவோம் என்று கூறுகின்றார். பிள்ளைகள் உள்ள இடத்தில் அதிகாரத்துக்கு வந்தால் ஒரு கிளாஸ் பால் வழங்குவோம் என்கின்றார்கள். பட்டதாரிகள் உள்ள இடத்தில் வேலை தருகின்றோம் என்று கூறுகின்றார்கள். கர்ப்பிணிகளிடம் போசணை பையொன்று தருகின்றோம் என்கின்றார்கள்.
இன்று இரண்டு கிறிஸ்மஸ் தாத்தாக்கள் இருக்கின்றார்கள். அன்று ஸ்ரீமா அம்மையார் இலவசமாக அரிசி தருகின்றேன் என்று கூறியபோது யாரோ எப்படி தருவீர்கள் என்று கேட்டதற்கு அவர் நிலவிலிருந்து கொண்டுவந்து தருவதாக கூறியுள்ளார். அதற்கு கைத்தட்டியுள்ளார்கள். வாக்கும் அளித்துள்ளார்கள்.
ஜே.ஆர். ஜயவர்தன மக்கள் பலவீனமாகவுள்ளார்கள். 08 இராத்தல் தானியம் வழங்குகின்றேன் என்று கூறினார். அவருக்கும் புள்ளடி இட்டார்கள். பிரேமதாச ஒரு கிளாஸ் பாலும் ஒரு துண்டு பப்பாசிப்பழமும் தருவதாக கூறினார். சந்திரிகா 3.50 சதத்துக்கு பாண் தருவதாக கூறினார்கள். இவர்களும் முடிவில்லாமல் எதையெதையோ தருவதாக கூறுகின்றார்கள்.
இவர்கள் இருவரும் பல தசாப்த காலங்களாக எமது நாட்டு மக்களின் ஏழ்மையை, வறுமையை விற்கின்றார்கள். ராஜபக்ஷக்கள் பல வருடங்கள் ஆட்சி செய்தார்கள் தானே. அப்போது இவற்றை வழங்கி இருக்கலாமே. தற்போது ஆட்சி புரிவது சஜித் பிரிவினர்தானே. அப்படியானால் அவர்களும் தற்போது கூறுவதை கொடுக்கலாமே. இம்முறை வறுமையை விற்கும் அரசாங்கத்துக்கு பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசாங்கம் ஒன்றை அமைப்போம்.
நாட்டின் மீது பெரும் கடன் சுமையை சுமத்தியுள்ளார்கள். ஆனால் ஆட்சியாளர்களின் கணக்குகள் நிறைந்துள்ளது. ஏழ்மைக்கு காரணம் இதுதான். நாம் வறிய கிராமங்களில் பிறந்து சிரமமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
இன்று சஜித் தான் ஏழை என்று கூறுகின்றார். நல்ல ஏழை. எமக்கு இந்நாட்டு மக்கள் படும் துயரம் பற்றிய உண்மையான வேதனை உள்ளது. அது வாக்குகளை பெற கூறும் போலியான ஒன்றல்ல. இந்த துயரத்திலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த நாட்டை உருவாக்க முடியாதென்றால் வேறு எந்த நாட்டையும் உருவாக்க முடியாது. ஊழல், மோசடி, வீண் விரயமற்ற நாடொன்றை கட்டி எழுப்புவோம். நாம் இந்நாட்டின் தேசிய ஒற்றுமை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
நாம் உறுதியான அஸ்திவாரமிட்டே நாட்டை கட்டியெழுப்புவோம். எமது நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவது எவ்வாறு? அதற்கு எமது நாட்டு கிராமிய மக்களின் வறுமையை போக்க வேண்டும். ஒரு போகம் விட்டு ஒருபோகம் பயிர் செய்ய, நல்ல உணவை பெற, வீடொன்றை அமைக்க, நல்ல ஆடைகளை வாங்க அவர்களுக்கு பொருளாதார வசதிகள் இல்லை.
எமக்கு அதிகாரம் கிடைத்தால் விஞ்ஞானபூர்வமான திட்டங்களுக்கமைய மீண்டும் சூழலை பாதுகாத்து விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீரை பெற்றுக்கொடுப்போம் என உறுதி அளிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment