தன்னிடம் இறால் பண்ணைகளோ சட்டவிரோத சொத்துக்களோ இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுள்ள விசமிகள் வதந்தி பரப்பவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) கூறுகையில், “எனது இறால் பண்ணையைப் பாதுகாப்பதற்காகவே மட்டக்களப்பு வாவி கடல் முகத்துவாரம் வெட்டப்பட்டதா என்ற தலைப்பில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட விசமிகள் போலிச் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளனர்.
என்னிடம் எந்த ஒரு இடத்திலும் இறால் பண்ணை கிடையாது. ஆகவே, முற்றிலும் அபாண்டமான பொய்களை வெளியிட்ட இணையத்தளம் மற்றும் நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
அரசியலிலும், சமூகத்திலும் மிகவும் கேவலமான மக்கள் செல்வாக்கிழந்த நயவஞ்சகர்கள் உள்ளார்கள். அவர்களின் கேவலமான வெளிப்படுத்தலே இத்தகைய வதந்திப் பிரசாரங்களாகும். என்னிடம் கோடிக்கணக்கான சட்ட விரோத சொத்துக்கள் இருப்பதாகவும் முகநூலில் பதிவேற்றியுள்ளனர்.
இந்தச் சொத்து விவரம் முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் பெயரில் இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிடப்பட்டிருந்ததை முன்பு காணக்கூடியதாக இருந்தது. தற்போது அப்பெயர் மாத்திரம் மாற்றப்பட்டு சொத்துப்பட்டியல் எனது பெயரில் வெளியிடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
இப்படி அவதூறாக வதந்திகளைப் பரப்பும் பொய்யர்களும் பொறாமைக்காரர்களும் தாங்கள் மிகவும் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
அத்தகையவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட மறுக்கிறார்கள், மறைக்கிறார்கள். ஆனாலும் கேவலப்பட்டு நிற்கும் இதுபோன்றவர்களை மக்கள் இனங்கண்டு கொண்டுள்ளார்கள்” என்றார்.
பெரியபோரதீவு நிருபர்
No comments:
Post a Comment