இடைக்கால அமைச்சரவையிலேயே இந்த நிலைமை என்றால் ஆட்சியை கையில் எடுத்தால் நிலைமைகள் என்னவாகும் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

இடைக்கால அமைச்சரவையிலேயே இந்த நிலைமை என்றால் ஆட்சியை கையில் எடுத்தால் நிலைமைகள் என்னவாகும்

பிணைமுறி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக இதுவரை புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சுனில் ஹந்துனெத்தி மேலும் கூறியுள்ளதாவது, “உறுதியான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முன்னரே இடைக்கால அரசாங்கத்தில் அச்சுறுத்தல், அடக்குமுறை மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கம், உறுதியான ஆட்சி ஒன்றினை உருவாக்கிக்கொண்டால் நிலைமை என்னவாகும் என ராஜபக்ஷக்களை ஆதரித்த மக்களே சிந்தித்துப்பாருங்கள்.

தேர்தலுக்கு முன்னர் இருந்தே நாம் இந்த காரணிகள் குறித்து அதிகமாகவே தெளிவுபடுத்தியுள்ளோம். தொடர்ச்சியாக மக்களுக்கு கூறினோம், இன்று அது நடக்க ஆரம்பித்துவிட்டது.

இப்போது உருவாகும் இந்த சூழல் மிகவும் மோசமான நிலையில் முடியும். தமக்கு எதிராக எழும் குரல்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் குறித்த நபர்களை அச்சுறுத்தி, சாட்சியங்களை திரிபுபடுத்தி நீதிமன்றத்தின் மீது அழுத்தம் பிரயோகித்து குற்றவாளிகள் தப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பல குற்றங்கள் குறித்து ஆராய ஆரம்பித்த நபர்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாக முக்கிய அதிகாரிகள் நாட்டினை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மத்திய வங்கி ஊழலில் குற்றவாளிகள் என கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் சுதந்திரமாக இன்னமும் நடமாடுகின்றனர். இவர்களை காப்பாற்றுகின்றோம் என எம்மையும் விமர்சித்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏன் ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை நடத்தவில்லை.

ஆனால் விசாரணைகளை நடத்திய அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கின்றனர்.

அரசாங்கம் அவ்வப்போது என்ன நினைக்கின்றதோ அதை செய்கின்றனர். இது நகைப்புக்குரிய விடயமாகும். அமைச்சரவை நியமனங்களை பார்த்தாலும், மூன்று மாதகால குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமான நியமனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்நாள் இரவு பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் இராஜாங்க அமைச்சர்களாக மாறியுள்ளனர்.

இடைக்கால அமைச்சரவையிலேயே இந்த நிலைமை என்றால் ஆட்சியை கையில் எடுத்தால் நிலைமைகள் என்னவாகும். மக்களிடமே நாம் இந்த கேள்வியை கேட்கிறோம். மக்கள்தான் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment