ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல் - மாகாண அதிகாரம் தனிநபர்களிடம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் மாகாண சபைத் தேர்தல் - மாகாண அதிகாரம் தனிநபர்களிடம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததோடு மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மறைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் சிலர் பாராளுமன்றத் தேர்தலுக்கு அவசரப்படுகின்றனர். அதற்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருப்பதாக கூறிய ஆணைக்குழுத் தலைவர், ஜனநாயக ரீதியில் மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதே முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். 

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நேற்று முன்தினம் நடத்திய ஊடக மாநாட்டின் போதே இதனை கூறினார்.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுற்று சகல மாகாண சபைகளும் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலுக்குச் செல்ல தாம் தயாராகி வருகின்றோம். ஆனால் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 

இது ஆரோக்கியமானதாகப்படவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தலை காலம் கடத்துவது ஜனநாயக முறைமைக்கு விரோதமானதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

எந்தத் தேர்தலையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே உள்ளது. ஆனால் உரிய நடைமுறை பேணப்பட வேண்டும். மாகாண சபைகளின் அதிகாரம் தனிநபர்களிடம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல. 

மாகாண சபைகள் இன்று மறைக்கப்பட்டுள்ளன. அவற்றை தேடிப்பிடித்து உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தயாராகவே இருக்கின்றோம் எனவும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment