ஏமாற்றுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் நினைத்தால், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக் ஸ்ரீஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின், பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
நேற்று (01) நுவரெலியா அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையக மக்களின் வாக்குரிமை 1947 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினால் பறிக்கப்பட்டது. அண்மையில் எமது மக்களின் வாக்குகளால் ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய தேசிய கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தலவாக்கலையில் வைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு தருவதாக தெரிவித்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் உருவாகி நாலரை ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இன்னமும் 1000 ரூபா வழங்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் 50 ரூபா கொடுப்பதாக தெரிவித்தார். அதனையும் இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து தீபாவளி முற்பணத்திற்கு மேலதிகமாக 5000 ரூபாய் தருவதாக தெரிவித்தார். அதற்கு தீர்வும் எட்டவில்லை. ஆகவே அதனை பெற்றுக் கொடுப்பதற்கு எமது கபினட் அமைச்சர்களுக்கு முதுகெலும்பு இல்லை.
இந்நிலையில்தான் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கோட்டாபய ராஜபக்ஷ கடந்த காலங்களில் நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக இருக்கும் போது பல அபிவிருத்திகளை செய்தார்.
அது மாத்திரமின்றி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்தான், தோட்டப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அவர் தெரிவித்தார்.
ஹற்றன் விசேட நிருபர்
No comments:
Post a Comment