நாட்டின் பாதுகாப்புக்காக மூவினங்களும் ஒன்றிணைய வேண்டும் - கோட்டாபயவை வெல்ல வைக்க இருக்கின்ற அணி போதுமானதாகும் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

நாட்டின் பாதுகாப்புக்காக மூவினங்களும் ஒன்றிணைய வேண்டும் - கோட்டாபயவை வெல்ல வைக்க இருக்கின்ற அணி போதுமானதாகும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்த நிலையில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பிரிந்து நிற்காமல் எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க முன்வர வேண்டுமென தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று முன்தினம் (02) மருதமுனையில் நடைபெற்ற ஒன்று கூடலில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று தமிழ் மக்களில் எழுபது வீதமானவர்கள் கோட்டாபயவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

தேவாலயத்துக்குள் குண்டு வெடித்த போது நாட்டுக்கு தலைவன் யாரென்று ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. எடுத்ததெற்கெல்லாம் நீதிமன்றம் செல்லவேண்டி ஏற்பட்டது. பாதுகாப்பாக சிங்கள மக்கள் கூட ஐயோ பாவம் என்று சொல்லிக் கொண்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

முழு முஸ்லிம் சமூகத்தையும் இனவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்து மொத்தத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு சீரழிந்தது. முதலில் நாட்டின் பாதுகாப்புத்தான் முக்கியம். நாட்டில் பாதுகாப்பு இருந்தால் நாங்கள் அச்சமடைய தேவையில்லை. தமிழ் மக்கள் எங்களுடைய அயலவர்கள். 

எனக்கு கிடைத்த அனைத்து அதிகாரங்களையும் உச்சமாக பாவித்து இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பிரித்து கொடுத்திருக்கின்றேன். 

நாம் இனவாதிகள் அல்ல. நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் செயற்பட்டுள்ளேன்.

பயங்கரவாதிகளுக்கு நாம் எதிரிகள். ஆயுததாரிகளுக்கு நாம் எதிரிகள். பள்ளிவாசல்களிலும் தொழுகைகளில் கர்ப்பிணித் தாய்மார்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு நாம் எதிரிகள். தமிழர்களுக்கு அல்ல.

நாம் தமிழர்களோடு வாழ வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்கு இப்பொழுது இருக்கின்ற அணி போதுமானதாகும். இந்த அணியின் பங்காளர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்றார். 

பெரியநீலாவணை விசேட நிருபர்

No comments:

Post a Comment