பிரிட்டனில் கண்டெய்னர் லொரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23ஆம் திகதி பல்கேரியா நாட்டின் கண்டெய்னர் லொரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து அங்கு சென்று அந்த கண்டெய்னர் லொரியை சோதனையிட்ட போலீசார் அதில் 39 பிணங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிணமாக மீட்கப்பட்டவர்களில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர்.
அந்த லொரியை ஓட்டிவந்த டிரைவரான 25 மதிக்கத்தக்க வடக்கு அயர்லாந்து நாட்டவர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மீது கொலை, ஆள்கடத்தல், சட்ட விரோத குடியேற்றத்திற்கு உதவியது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. பின்னர் 39 பேருமே வியட்நாமை சேர்ந்தவர்கள் என கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டன் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
‘வெளிநாடுகளுக்கு மக்களை கடத்துதல் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’, என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment