ஹெரோயின் என சந்தேகிக்கும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஐவர் கைது - இவ்வாண்டில் மாத்திரம் 739 கிலோ ஹெரோயின் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

ஹெரோயின் என சந்தேகிக்கும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஐவர் கைது - இவ்வாண்டில் மாத்திரம் 739 கிலோ ஹெரோயின் மீட்பு

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருளை ட்ரோலர் படகு ஒன்றில் கடத்திச் சென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (03) இலங்கையின் தென் கடலில் காலி கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட நடவடிக்கையின் போது, இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாக, இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

இதன்போது ​​சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பல் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, மீன்பிடிக் கப்பலுக்குள் இருந்த குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிலிருந்து 5 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடல் வழியாக இலங்கைக்குள் கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கப்பலை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இவ்வாண்டு மாத்திரம் கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் 739 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு மாத்திரம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட, மூன்று தொன் கேரள கஞ்சா (3,263 கிலோகிராம்), 8 கிலோகிராம் உள்நாட்டு கஞ்சா, 42 தொன் பீடி இலைகள் (42,851 கிலோகிராம்) உள்ளிட்ட பாரிய போதைப் பொருட்களை சட்டத்தின் முன் கொண்டு வந்ததன் மூலம், தேசிய போதைப்பொருள் தடுப்பு திட்டத்திற்கு கடற்படை பாரிய பங்களிப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொர்பில், இலங்கை கடற்படைக்கு மிகப் பாரிய சர்வதேச ஒத்துழைப்பு கிடைப்பதுடன், அதன் மூலம் மிக பரவலான சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கடல் பகுதி மாத்திரமன்றி நாட்டிற்குள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தேசிய பணியில் கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடரும் என, இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment