யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான வணிக விமான சேவைகள், எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது
எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் வழங்கும் குறிப்பிட்ட நேர அட்டவணையுடன் விமான சேவைகள் தொடங்கப்படுமென, இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
தினமும் இவ்விரு விமான நிலையங்களுக்கும் இடையில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இரு வழிக் கட்டணமாக 15,690 ரூபா அறவிடப்படும். இதேவேளை, சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இலங்கை ரூபாயில் 7,879 ரூபா அறவிடப்படுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 10ஆம் திகதி யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வாரத்தில் 03 விமான சேவைகளை நடத்தவுள்ளதாக, இலங்கையின் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான Fits Aviation தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்திற்கு 32 முதல் 50 நிமிடங்கள் பிடிக்கும் எனவும் விமானப் பயணச் சீட்டுகளை பதிவு செய்யும் முகவரங்களின் இணையத்தளங்களின் ஊடாக பயணிகள் பயணச் சீட்டுகளை முற்பதிவு செய்ய முடியும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத் தூதரகத்திலும் வீஸாக்களை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment