(எச்.எம்.எம்.பர்ஸான்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய வெய்யில் மனிதர்கள் (மொழிபெயர்ப்பு நாவல்), எனக்குள் நகரும் நதி (பத்தியெழுத்துத் தொகுதி) ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா (04.10.2019) வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
நூல்கள் வெளியீட்டு விழாவில் முதற்பிரதியை நிகழ்வின் சிறப்பதிதியாக கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை கவிஞர் வாழை - மயில் எச்.எம்.எம்.இஸ்மாயில் நிகழ்த்தியதோடு, எனக்குள் நகரும் நதி நூலை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி உரையாற்றினார்.
அத்தோடு வெய்யில் மனிதர்கள் நூலை முன்வைத்து எழுத்தாளரும் அக்கறைப்பற்று கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி ஹனீபா இஸ்மாயில் உரை நிகழ்த்தியதோடு, நிகழ்வில் சிறப்புரையினை முன்னோடிக் கவிஞர் சோலைக்கிளி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக ஜம்இய்யது உலமா கல்குடா கிளையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் பஹ்ஜி, இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளர் பாஸ்டர் ஜோன் லோக நாதன், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸ்ஸாக், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை கூட்டுத் தாபன பணிப்பாளர் எம்.எல்.அப்துல் லத்தீப், பிறை எஃப். எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், பர்வீன் ரேடின்ங் தவிசாளர் கலீல் முஸ்தபா உட்பட உள்ளூர், வெளியூர் கவிஞர்கள், எழுத்தாளர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பசுமை கலை இலக்கிய வட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்த இந்நிகழ்வின் நன்றியுரையினை நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment