கூட்டணியா, தனித்தா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

கூட்டணியா, தனித்தா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியாகவா?அல்லது தனித்தா? போட்டியிடுவதென தீர்மானிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு கூடவுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை முழுமையான இணக்கம் எட்டப்படாத பின்புலத்திலேயே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. 

சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை எட்டுச் சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் மூன்று முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. 

நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போதும் எவ்வித இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதில் சுதந்திரக் கட்சி உறுதியாகவுள்ளது. என்றாலும், பொதுஜன பெரமுனவில் இதற்கு பச்சைக்கொடி காட்ட தயாராகவில்லை. 

நேற்றுமுன்தினம் பொது சின்னம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள சூழலில் தாமரை மொட்டு சின்னத்தை மாற்றினால் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார்.

இன்றைய தினம் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சுதந்திரக் கட்சி உள்ளது.

நாளைய தினம் பி.ப. 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை முடிவடையவுள்ள நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. 

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தரப்புக்கும் இடையில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment