தேர்தலை இணக்க அரசியலை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த போகிறோம் - தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையையோ, பிரதமரையோ மாற்றுவதல்ல எனது பணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2019

தேர்தலை இணக்க அரசியலை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த போகிறோம் - தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையையோ, பிரதமரையோ மாற்றுவதல்ல எனது பணி

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்தே கலந்துரையாடப்பட்டது. தனிப்பட்ட அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. இந்த தேர்தலை இணக்க அரசியலை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த போகிறோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

தேசத்தை வறுமைக் கோட்டிலிருந்து விடுவிப்பதே எனது முதல் பணி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நீதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டில் வாழும் சனத் தொகையில் 40 சதவீதத்தினர் வறுமைக்கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட அளவினர் மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். மிகக் கஷ்டமான ஏழ்மை நிலைக்குள் இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மொத்த சனத்தொகையில் 40 சதவீதத்தின் வறுமையிலும் மேலும் 45 சதவீதத்தினர் மத்தியதரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 20 சதவீதத்தினர் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இந்த இடைவெளியை நீக்குவதற்கு நாம் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கின்றோம்.

மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கால எல்லை வகுத்து நாட்டிலிருந்து வறுமையை விரட்ட நடவடிக்கை எடுப்பேன்.

மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் திட்டத்துக்கு வாய்ப்பளிக்கப்படும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும். முரண்பாடுகள் கலையப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தையும் இலக்காக் கொண்ட தேசிய அபிவிருத்தித்திட்டத்தை முன்னெடுப்பதே எமது இலட்சியமாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையையோ, பிரதமரையோ மாற்றுவதல்ல எனது பணி. மக்கள் நம்பிக்கையுடன் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் உரிய காலம் வரும்போது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அப்போது புதிய அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த விடயத்தில் யாரும் அவசரப்பட வேண்டியதில்லை என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment