தோட்ட தொழிலாளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகத்தில் மோசடி? - இரத்தினபுரி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் முறையீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

தோட்ட தொழிலாளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகத்தில் மோசடி? - இரத்தினபுரி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் முறையீடு

தோட்ட தொழிலாளர்களுக்கான வாக்காளர் அட்டைகளை நேரடியாக அவர்களது இல்லங்களுக்கு சென்று விநியோகிக்காமல் மறைமுகமான மோசடி நடவடிக்கைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் சில தோட்டப் பகுதிகளில் இடம் பெற்று வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயமாக இரத்தினபுரி மாவட்ட அரசியல் மற்றும் சமூக சேவை பிரமுகர்கள் இரத்தினபுரி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சுரங்க அம்பகஹதென்னவிடம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிலைமை பரவலாகக் காணப்படுவதுடன் விசேடமாக ஓப்பநாயக, ஹுனுவல ஹல்லின்ன, அக்கரல்ல, பெல்மதுளை, பலாங்கொடை பகுதிகளில் இந்நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயமாக இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரமுகர் செல்லதுரை சரத்பாபு, இரத்தினபுரி மாவட்ட தமிழர் மறுமலர்ச்சி அமைப்பின் பொதுச் செயலாளர் கே. தியாகேஸ்வரன், பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ் விஜயகுமாரன் ஆகியோர் இம்முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

பெரும்பான்மை இன மக்களின் வாக்காளர் அட்டைகளை அவரவர்களது வீடுகளுக்கு சென்று பொறுப்புடன் கையளிக்கும் தபால் விநியோகஸ்தர்கள், தோட்ட தொழிலாளர் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர்.

தோட்டப் பகுதிகளில் தாங்கள் விரும்பிய நேரங்களில் குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடங்களுக்கு தொழிலாளர்களை வருமாறு அழைப்பு விடுக்கும் தபால் விநியோகஸ்தர்கள் குறித்த நேரத்தில் உரிய இடத்துக்கு தொழிலாளர்கள் வர முடியாதவிடத்து திரும்பி சென்று விடுகின்றனர்.

தொழிலாளர்களில் சிலர் தோட்டங்களில் வசித்தாலும் பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களிலும் நாட்டுப்புறங்களிலும் தொழில்களுக்கு செல்கின்றனர்.

எனவே தபால் விநியோகஸ்தர்கள் அழைப்பு விடுக்கின்ற நேரங்களில் அதிலும் உரிய நேரத்திற்குள் அவர்கள் குறிப்பிடும் இடங்களுக்கு அனைவருக்கும் சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்வது நடைமுறை சாத்தியமற்ற விடயம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பாலான தோட்டப் பகுதி வாக்காளர்களில் கணிசமானோருக்கு வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(இரத்தினபுரி நிருபர்)

No comments:

Post a Comment