எந்த வேட்பாளருக்கும் எதிராகவோ யாரினதும் அழுத்தத்திற்காகவோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களின் அடிமனதிலுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக கற்றவர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்களின் சார்பில் களமிறங்கியுள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூறுகையில், கட்சி சாராத சுயாதீனமான வேட்பாளராகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தும் நபர்களே எமது அணியில் இருக்கிறார்கள்.
71 வருட கால கட்சி அரசியல் முறைமையில் இருக்கும் குறைபாடுகள் மாற்றப்பட வேண்டும். தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி நாட்டு நலனுக்காக இணைந்துள்ள புத்திஜீவிகள் தொழில்சார் நிபுணர்கள் அடங்கிய குழு சார்பில் போட்டியிடுகிறேன்.
இராணுவ தளபதியாக இருந்தாலும் சிவில் நிர்வாகம் பற்றி அனுபவம் உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஏனையவர்கள்தான் தவறாக பயன்படுத்தினார்கள். நாம் கட்டுக்கோப்புடன் செயற்பட்டவர்கள். எமது அணியில் தனிமுடிவு அன்றி கூட்டாகவே முடிவுகள் எடுக்கப்படும்.
தற்போதைய அரசியல் முறைமை தொடர்பில் மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்றவே போட்டியிடுகிறேன். பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் என்பவற்றிலும் எமது அணி போட்டியிடும் என்றார்.
No comments:
Post a Comment