பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த, புதிய அமைச்சர்களும் பதவியேற்பர் - ஐ.தே.கட்சி மேற்கொண்ட அபிவிருத்திக்கு ஏதாவது அடையாளம் காணப்படுகிறதா? - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த, புதிய அமைச்சர்களும் பதவியேற்பர் - ஐ.தே.கட்சி மேற்கொண்ட அபிவிருத்திக்கு ஏதாவது அடையாளம் காணப்படுகிறதா?

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும், புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வட கொழும்பு தேர்தல் தொகுதியின் மக்கள் ஐக்கிய முன்னணி இளைஞர் அமைப்பின் தலைவர் நிஸ்புல் பிரசன்ன தலைமையில் (28) இரவு கிராண்ட்பாஸில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் பிரசார கூட்டத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பல கட்சிகள் இணைந்திருப்பது எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத் திறமையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என்பதனாலேயாகும். இதன் காரணமாகவே தொழிலாளர் காங்கிரஸும் எம்முடன் கைகோர்த்துள்ளது. 

எமது வெற்றி உறுதியானது, நவம்பர் 17ஆம் திகதி அரசியல் புரட்சி ஏற்படும். இந்நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்வார். 

தொடர்ந்து பேசிய அவர், இன்றைய அரசு பெரும் ஊழல் கொண்ட ஆட்சியை மேற்கொண்டு வருகின்றது. இந்நாட்டின் அரச இயந்திரங்கள் அனைத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்கு ஐம்பது ரூபாய் சம்பளம் அதிகரிப்பு வழங்க இயலாத நிலையில் நிதி அமைச்சர் பணம் இல்லை எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு இன்று நாடு பெரும் சிக்கலில் செயல்படுகிறது. 

கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத் திறமையின் பயனாகவே வட கொழும்பு பெரும் அபிவிருத்தியை மஹிந்தவின் ஆட்சியில் கண்டது. வட கொழும்பின் சேரிப் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டு தொடர்மாடி வீடமைடப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டன. 

வடகொழும்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என பலராலும் வர்ணக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கே அனைத்து தேர்தல்களில் வாக்களிக்கும் மக்கள் கூட்டம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சி வட கொழும்பில் எவ்வாறான அபிவிருத்தியை அவர்களின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அடையாளம் ஏதாவது காணப்படுகிறதா? 

இன்று வட கொழும்பின் வர்த்தக பிரதேசம் பெரும் வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டது. பலர் தொழிலை இழந்து பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். சுய வருமானம் பெரும் வீழ்ச்சியை எட்டிவிட்டது. பொருளாதாரம் சீரழிந்து விட்டது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உபதலைவர் சஜித் பிரேமதாசவுமேயாகும். 

2015 இல் மஹிந்த ஆட்சியை கையளிக்கையில் அமெரிக்கன் டொலர் ஒன்றின் விலை 136.00 ரூபாவாக இருந்தது. இன்று அவ் டொலர் 182.00 ரூபாவை தொட்டு விட்டது. 

இதனால் பலவித கைத்தொழில்கள் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வெளிநாட்டினரின் முதலீடு இல்லாத போய்விட்டது. நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை கண்டுள்ளது. அபிவிருத்தியையோ முன்னேற்றத்தையோ காணாது உள்ளமை பெரும் கவலைக்குறிய செயலாகும். 

நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் இந்நாட்டின் பாதுகாப்பை நாம் உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்வோம். எமது வெற்றி உறுதியானது.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை திறமையாக முன்னெடுப்போம். கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களியுங்கள். ஜனநாயகத்தை பாதுகாப்போம். வட கொழும்பின் தமிழ், சிங்கள, இஸ்லாமிய பாடசாலைகள் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இதை கோட்டாபய தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெரிவித்துள்ளார். 

வட கொழும்பு நிருபர்

No comments:

Post a Comment