பொலிஸார் இருவர், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் இருக்கின்ற புகைப்படத்தை பிரசுரித்து, திரிபுபடுத்தி இணையத்தளங்களிலும் ஒரு சில செய்தித் தாள்களிலும் வெளியிடப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் கோட்டை பகுதிக்கு சென்றுள்ளதாகவும், அந்நேரத்தில், வீதி பாதுகாப்பு, உயரமான கட்டடங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.டி. ஆர் தசநாயக்க மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ ஆகியோரின் கீழ் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த வேட்பாளர் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் இருவருடனும் குறிப்பிட்ட சிறிது நேரத்திற்கு உரையாடியுள்ளதாகவும், இதன்போது, யாரோ ஒருவரால் அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் பிடித்து, திரிபுபடுத்தி, ஒரு சில வாக்கியங்களை இணைத்து, குறித்த வேட்பாளரின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு குறித்த புகைப்படத்தை பயன்படுத்தி சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு அதிகாரிகளினதோ அல்லது இலங்கை பொலிஸ் திணைக்களத்தினதோ எந்தவொரு அனுமதியுமின்றி குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த தினத்தில் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க யாழ் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment