சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : வடக்கு, கிழக்கு மறுசீரமைப்புக்கு இரண்டு ஜனாதிபதி செயலணிகள் - அவசியமற்ற காணிகள் விடுவிப்பு - குற்றச்சாட்டு அற்றவர்கள் விடுதலை - இனங்களின் உண்மையான வரலாறு மீள எழுதப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : வடக்கு, கிழக்கு மறுசீரமைப்புக்கு இரண்டு ஜனாதிபதி செயலணிகள் - அவசியமற்ற காணிகள் விடுவிப்பு - குற்றச்சாட்டு அற்றவர்கள் விடுதலை - இனங்களின் உண்மையான வரலாறு மீள எழுதப்படும்

வடக்கு, கிழக்குப் பகுதிகளின் மறுசீரமைப்புக்காகவும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்கவும் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் ஏற்படுத்தப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு அவசியமற்றதெனக் கருதப்படும் காணிகளைத் துரிதமாக விடுவிப்பதற்கும் குற்றச்சாட்டுகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுப்பதாகவும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (31) கண்டியில் வெளியிட்டுவைக்கப்பட்டது. அதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் நலன் கருதி பல்வேறு விடயங்கள் குறிப்பிட்டுள்ளன.

வடக்கு மட்டும் கிழக்கு மாகாணங்களில் மறுசீரமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கென இரண்டு ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள காணிப் பிரச்சினையை ஒரு வருடத்திற்குள் தீர்த்து வைக்கும் ஜனாதிபதி ஆனைக்குழு நியமிக்கப்படும். 

மகாவலி, வனவிலங்கு, வேறு திணைக்களங்கள் போருக்கு முன்னர் மக்களுக்கு சொந்தமாக இருந்த காணிகளை மக்கள் மீளக்குடிமயர்வதற்கென விடுவிக்கப்படும். 

நீண்ட கால இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வணிகங்களின் மறு சீரமைப்பு மற்றும் அவசர உதவிகளைச் செய்துகொடுப்போம். 

அகதிகளாக அந்நிய நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இலங்கையர்களுக்கு அவர்கள் மீளத் திரும்புவதற்கான ஊக்குவிப்பும் உதவியும் வழங்கப்படும். மேலும் மீளத்திரும்பும் செயல்முறையை எளிதாக்க தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். 

போர் பிரதேசங்களில் தொழில் நுட்பக் கல்வி விருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் நிறுவப்படும் நவீன தொழில்நுட்பக்கற்கை மையத்துடன் இப்பணி ஆரம்பமாகும். 

இப்பிரதேசங்களில் ஊக்குவிப்பு சலுகைகளுக்கு மேலதிகமாக புதிய அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கென சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்படும். குற்றம் சுமத்தப்படாமல் விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை நாம் முழுமையாக ஆதரிப்போம். 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பொருத்தமான இடங்களில் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு அலுவலகத்திற்கு அறிவுறுத்துவோம். 

அரச ஆதரவு, குடிப்பரம்பல் மாற்றங்கள் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பேணப்படும். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கு அவசியமில்லாத அனைத்து நிலங்களும் அவற்றின் உரிமையாளர்களிடமோ அல்லது பொதுத்துறை அதிகாரங்களிடமோ தாமதமின்றித் திருப்பிக் கொடுக்கப்படும். 

எதிர்காலத்தில் இன சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் ஊக்கிவிப்பதற்காக பாடசாலை பாடத்திட்டமானது குறிப்பாக வரலாற்றுப் பாடத்திட்டம் அனைத்து சமூகங்களினதும் உண்மையான வரலாற்றைப் பிரதிபலிக்கும் முகமாக மாற்றியமைக்கப்படும். 

எங்கள் வரலாற்றில் தனி நபர்கள், குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பிற நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனைப் போக்கு அவர்கள் இழைத்த தவறுகள் என்பவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவசியமான இடங்களில் பாடத்திட்டம் திருத்தியமைக்கப்படும். என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment