புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் - சம்பந்தன் வலியுறுத்து - News View

About Us

Add+Banner

Wednesday, October 2, 2019

demo-image

புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் - சம்பந்தன் வலியுறுத்து

The-United-Kingdom-Minister-of-State-for-the-Commonwealth-UN-and-South-Asia-and-Prime
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த சூழலில் பிரித்தானியா உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு இனப் பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது என்பதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், பொறுப்புக் கூறலை சர்வதேசம் உறுதி செய்ய வேண்டும் என வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும் முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இரா. சம்பந்தன் வலியுறுத்தினார், “தமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டவர்கள். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான ஒரு அரசியல் அதிகார பரவலாக்கத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் பிரிபடாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன்றினையே வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசியல் கட்சிகள் காட்டிவரும் அசமந்த போக்கு தொடர்ப தனது அதிருப்தியை தெரிவித்த இரா.சம்பந்தன், மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களே முடிவெடுத்து செயற்படும் ஒரு ஜனநாயகமே எமது தேவை என்பதனையும் வலியுறுத்தினார்.

“நாம் எமது நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக முறையில் முன்வைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய யுத்தம் இடம்பெற்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கழிந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

அந்த கால கட்டத்தில் பிரித்தானியா உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு நிச்சயம் காணப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது என்பதனை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஐக்கிய இராஜ்ஜியம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஆக்கபூர்வமான இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படும் என உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா கூல்டன், அமைச்சரின் செயலாளர் லோரா டுன்பர் ப்ரூக்ஸ், செயலாளர் நீல் கவனக் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரி ஜொவிட்டா அருளானந்தம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *