புதிய கூட்டணியின் கீழ் நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டி - நாம் எமது பிரசாரத்தை 56 சதவீதத்திலிருந்து ஆரம்பித்துள்ளோம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

புதிய கூட்டணியின் கீழ் நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டி - நாம் எமது பிரசாரத்தை 56 சதவீதத்திலிருந்து ஆரம்பித்துள்ளோம்

புதிதாக உதயமாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கீழ் அடுத்துவரும் அனைத்துத் தேர்தல்களையும் சந்திப்போமென பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ என்ற புதிய அரசியல் கூட்டணிக்கான உடன்படிக்கை நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் உருவான பாரிய கூட்டணியாக ‘ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ உள்ளது. வெவ்வேறு கொள்கைகளையுடைய 17 கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திட்டுள்ள போதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது இலக்குக்காக கைகோர்த்துள்ளன.

தாய் நாட்டை நேசிக்கும் கட்சிகளே இவ்வாறு ஒரு கூட்டணியில் இணைந்துள்ளன. எனது ஆட்சிக் காலத்தில் மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தி செய்யப்படும். அதற்காக எமது கூட்டணியின் அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.

பாராளுமன்றம் மற்றும் வெளியிலும் கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகும். பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளிலும் அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு கட்டாயமானதாகும். அடுத்துவரும் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களின் வெற்றிக்காக இக் கூட்டணியிலேயே போட்டியிடுவோம்.

கூட்டணியில் உள்ள 17 கட்சிகளும் இணைந்து கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 56 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. 

ஆகவே, நாம் எமது பிரசாரத்தை 56 சதவீதத்திலிருந்துதான் ஆரம்பித்துள்ளோம். நாட்டின் ஜனாதிபதி யாரென மக்கள் முடிவு செய்துவிட்டனர். உறுதியாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment