சஜித் பிரேமதாச பயணம் செய்த ஹெலிகொப்டர் - மின்சார துண்டிப்பு தொடர்பாக உடனடி விசாரணை வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

சஜித் பிரேமதாச பயணம் செய்த ஹெலிகொப்டர் - மின்சார துண்டிப்பு தொடர்பாக உடனடி விசாரணை வேண்டும்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பயணம் செய்த ஹெலிகொப்டர் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இரவு தரையிறங்க இருந்தபோது குருநாகல் நகரில் திடீரென மின் துண்டிப்பு இடம்பெற்றமை தொடர்பாக உடனடி விசாரணை நடத்தவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

மேற்படி சம்பவம் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழு, சி.ஐ.டி, இலங்கை மின்சார சபை மற்றும் குருநாகல் மாநகர சபை ஆகிய நிறுவனங்கள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவரது பிரசாரத்தின்போது சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் மேற்படி மின்சார துண்டிப்பு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதா என்பது பற்றி தெரிய வேண்டும். 

ஏனெனில் அச்சம்பவம் எமது வேட்பாளருக்கு உயிராபத்தை கூட ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அது பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

இதேவேளை குருணாகலை நகரத்தில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த சஜித் பிரேமதாச பயணம் செய்த ஹெலிகொப்டர் மேற்படி மின்சார துண்டிப்பு காரணமாக அங்கு இறங்காமல் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று இறங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment