வாக்களிக்க இம்முறை 'கார்ட்போட்' பெட்டிகள், 90 மில்லியன் ரூபா மீதம் - 40 வருடங்களுக்கும் மேலாக ஏச்சும் பேச்சும் கேட்டுப் பழக்கப்பட்டவன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

வாக்களிக்க இம்முறை 'கார்ட்போட்' பெட்டிகள், 90 மில்லியன் ரூபா மீதம் - 40 வருடங்களுக்கும் மேலாக ஏச்சும் பேச்சும் கேட்டுப் பழக்கப்பட்டவன்

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்கு குறைந்த செலவில் 12,500 கார்ட்போட் வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் மரப்பெட்டிகளை தயாரிக்க 100 மில்லியன் ரூபா செலவாவதை 10 மில்லியனில் செய்ய முடிந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

மூன்று வகையான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறைந்த வாக்குகளை கொண்ட வாக்களிப்பு நிலையத்துக்கு சிறிய பெட்டியும். மத்திய தரத்துக்கு சாதாரண பெட்டியும், ஆகக்கூடிய வாக்குகளைக் கொண்ட வாக்களிப்பு நிலையத்துக்கு பெரிய பெட்டியும் பயன்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், முழு நாட்டிலும் மொத்தம் 12,845 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் ஒரு வாக்குப் பெட்டி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெட்டிகளைப் பயன்படுத்தியுள்ளோம். மரப்பெட்டிகளை அமைக்க கூடுதலான பணம் செலவிட வேண்டியுள்ளதால் நாம் கார்ட்போட் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிட்டோம்.

மரப்பெட்டிகளை செய்வதாக இருந்தால் 100 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது அதில் 90 மில்லியன் ரூபாவை எம்மால் மீதப்படுத்த முடிந்துள்ளது. பெட்டிகள் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளன. பரிசீலித்த பின்னரே இதனைத் தெரிவு செய்தோம்.

இப்பெட்டிகளால் எந்த தவறுகளும் ஏற்படப்போவதில்லை. வாக்கு மோசடிகளுக்கும் இடமில்லை. வாக்குப் பெட்டிகள் கைமாறக்கூடிய வாய்ப்புகளும் கிடையாது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

தேர்தலன்று நேர காலத்துடன் வாக்களிப்பதன் மூலம் சிரமங்களை தவிர்க்க முடியும். ஏனெனில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க போதிய காலஅவகாசம் தேவையென்பதை உணர்ந்தே சில மாற்று நடவடிக்கைகளை இத்தேர்தலில் கையாளத் தீர்மானித்துள்ளோம்.

எதைச் செய்தாலும் என்னை தூற்றுபவர்கள் இருக்கவே செய்கின்றனர். நல்லது கெட்டதை பார்க்கமாட்டார்கள். என்னை குறைகள் கொண்டே பார்க்கின்றனர். 

40 வருடங்களுக்கும் மேலாக ஏச்சும் பேச்சும் கேட்டுப் பழக்கப்பட்டவன். எனது கடமையை சரிவரச் செய்வதில் நான் தவறமாட்டேன். தவறிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கவும் மாட்டேன்.

தேர்தலின் போது சட்டம் ஒழங்கைப் பேணுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். ஊடகங்கள் பக்கம் சாராது இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பல தடவைகள் இதனை சுட்டிக்காட்டியுள்ளேன். 

சில விடயங்களில் சட்டத்தை என்னால் சரிவரச் செய்ய முடியாது. அதிகாரம் தரப்பட்டாலும் அது வேறுவழியில் என்னிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகின்றேன் என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment