நீராவியடி அடாவடிச் சம்பவம் : நீதிமன்றத் தீர்ப்பை மீறியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுங்கள் - மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2019

நீராவியடி அடாவடிச் சம்பவம் : நீதிமன்றத் தீர்ப்பை மீறியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுங்கள் - மைத்திரிக்கு சம்பந்தன் கடிதம்

"நீராவியடிப் பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாசார நிலைமை தொடர்வதை ஊக்கப்படுத்துவதாக அமையும் அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் மிகப் பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை மீறிய நபர்கள் முறையாகக் கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்குத் துணையாக இருந்து நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்."

இவ்வாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

27.09.2019 என்று திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் பிரதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு இன்று (29) மாலை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு "முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை தங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்தச் சம்பவத்தின் உண்மை நிலைவரம் பின்வருமாறு.

1. நீராவியடிப் பிள்ளையார் கோயிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன கோயிலாகும்.

2. இந்த ஆலயப் பிரதேசத்தில் வாழும் மக்கள் முற்றிலும் தமிழ் மக்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

3. போர் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார்

4. குறித்த நிலத்தை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்து மக்கள் தொடந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதோடு இது தொடர்பில் ஒரு முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.

5. குறித்த பௌத்த துறவி அண்மையில் கொழும்பில் காலமானார். அவரது பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வேண்டுமென்றே உணர்ச்சினைகளைத் தூண்டுவதற்காகச் செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

6. இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, கடந்த 22ஆம் திகதியன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடையுத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

7. மேலதிக விசாரணைகளின் பின்னர் மறுநாள் 23ஆம் திகதியன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதைத் தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த இறுதிக் கிரியைகள் ஆலய வளாகத்துக்கு அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெற வேண்டியதாயிருந்தது.

8. நீதிமன்றக் கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. தீர்த்தக்கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனித நீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இந்தச் செயலினால் ஆலயமும் அதன் பூமியும் தனது புனிதத் தன்மையை இழந்துள்ளது. சைவ மக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்த பிறகு குறைந்தது ஒரு மாத காலம் வரையில் ஆலயத்தினுள்ளோ அதன் பூமிக்கோ செல்வதில்லை

9. நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த பொலிஸார் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்குத் துணையாக இருந்தனர்.

10. இதன்பிரகாரம், பின்வரும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகின்றேன்.

(i) நீதிமன்றத் தீர்ப்பை மீறிய நபர்கள் முறையாகக் கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ii) நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்குத் துணையாக இருந்து நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறிய பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது. இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்.

மேலும், அண்மைக்காலங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாசாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

நீதிமன்றத்தை அவமதித்த நபருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி செயற்பட்ட நபரொருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்ட மீறல்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது.

நான் மேலதிக விபரங்களைத் தற்போது குறிப்பிட விரும்பவில்லை. நான் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில் மேதகு ஜனாதிபதியாகிய தங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என அறிவேன்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாசார நிலைமை தொடர்வதை ஊக்கப்படுத்துவதாக அமையும் அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் மிகப் பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.

எனவே, சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்றத் தீர்ப்பை மீறிய நபர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இப்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment