அடை மழை - அனர்த்த முன்னெச்சரிக்கையாக படையினர் உஷார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 17, 2019

அடை மழை - அனர்த்த முன்னெச்சரிக்கையாக படையினர் உஷார்

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உருவாகக்கூடிய அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கென முப்படையினரும் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 

அடைமழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து சில தினங்களுக்கு நீடிக்கும் அதேநேரம் நாட்டின் வட, மத்திய, மேல், சப்ரகமுவ, தெற்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரை அடை மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

களுகங்கை மற்றும் அத்தனகல்ல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் அடைமழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் லுணுகம்வெஹெர, திஸ்ஸமஹாராம மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 69 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 

இதேவேளை கற்பாறைகள் உருண்டு விழுவதால் ஏற்படும் அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பதுளை சொரணதொட்ட பிரதேசத்திலிருந்து 88 பேர் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 

நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் கொட்டாஞ்சேனையிலுள்ள ஆமர் வீதி, பாபர் சந்தி உள்ளிட்ட சில பகுதிகள் நீரில் மூழ்கி காணப்பட்டன. 

கடந்த 48 மணித்தியாலங்களுள் ஆகக்கூடிய மழை வீழ்ச்சியாக 192 மில்லி மீற்றர் மழை நுவரெலியாவிலுள்ள ஆல்டன் தோட்டத் தொழிற்சாலையில் பதிவாகியுள்ளது. 

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சுமார் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

சீரற்ற காலநிலை காரணமாக கடலில் அடிக்கடி மழை பெய்யும். அதேநேரம் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றராக இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் மழையால் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, நுவரெலியாவில் அம்பகமுவ, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வெட்டப்பட்ட நிலச் சாய்வுகளில் மண்சரிவு அபாயம் அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவானை மற்றும் இரத்தினபுரி செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஓரளவு மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நிலத்தில் வெடிப்பு உருவாகினால், மரங்கள், மின்கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைப்பேசிக் கம்பங்கள் வீழ்ந்தால், சாய்வான இடங்களில் அமைந்துள்ள கட்டிடங்களின் தரை மற்றும சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டால், நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுக்கள் தோன்றினால் அல்லது நீரூற்றுக்கள் தடைப்பட்டால் மக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment