ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகப் பல தரப்புகளினதும் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அழைப்புக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
இதற்கமைய தயாசிறி ஜயசேகரவுடன் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆரம்பகட்டப் பேச்சுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து இறுதிக்கட்ட பேச்சுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சஜித் பிரேமதாஸ தயாராகி வருகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலைப் பொதுச் சின்னத்தில் எதிர்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ராஜபக்சக்கள் ஏற்க மறுத்தனர். மொட்டுச் சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும் எடுத்துரைத்தனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை தாமரை மொட்டுச் சின்னத்திலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொதுச் சின்னத்திலும் எதிர்கொள்வதற்கான யோசனையையும் ராஜபக்சக்கள் முன்வைத்தனர். எனினும், மைத்திரி உடனடிப் பதில் எதனையும் வழங்கவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் சஜித் இறங்கியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று திங்கட்கிழமை கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது சஜித்தால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் வார இறுதியிலேயே அது சாத்தியமாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Charles Ariyakumar Jaseeharan

No comments:
Post a Comment