புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தோல்வி அடைந்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூவருமே காரணம். இதில் ஒருவரை விடுவித்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை மைத்திரி, மஹிந்த கூட்டணியே தோற்கடித்தது என்றும் தேர்தலுக்காக தற்போது தமிழ் மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றியது முதல் தற்போது அவர்களுக்கு முண்டுகொடுப்பது வரை அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் எந்தவொரு அனுமதியையும் பெறாத நிலையிலேயே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.
குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சியினர் தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகி தமிழ் தேசிய நீக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் சரணாகதி அடைந்துவிட்டார்கள்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்டுபாடுகள் எல்லாவற்றையும் கைவிட்டு முற்று முழுதாகவே அபிவிருத்தி என்ற போர்வையில் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை வைத்து தாமே செய்ததாக உரிமை கோரிக்கொண்டு மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளை செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு பணிகளை மைத்திரி தோற்கடித்துவிட்டார். மஹிந்த எதிராக பிரசாரம் செய்துவிட்டார். எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் கதை கூற ஆரம்பித்து விட்டனர்.
கொள்கைகளை கைவிட்டு நிபந்தனையற்ற விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஆதரவை வழங்கி ஆட்சியாளர்களுடன் சரணாகதியடையும் போதே இத்தகைய இராஜதந்திரம் தோல்வியைச் சந்திக்கும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எம்மை எதிராளிகளாக மாற்றிவிட்டு அதே பாதையில் கூட்டமைப்பு பயணித்தது.
ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே கூட்டமைப்பினதும், சம்பந்தனினதும் இராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று பகிரங்கமாக கூறுமளவிற்கு நிலைமை வந்துள்ளது என்றார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment